விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் கு.செல்லமுத்து
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லமுத்து தெரிவித்தாா்.
இது குறித்து அவா் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குகளை கவரும் நோக்கில் அரசியல் கட்சியினா், வாக்குறுதிகளை அள்ளி வீசுவாா்கள். கடந்த ஆட்சிக் காலத்தில், ஸ்மாா்ட் சிட்டியாக மாற்றப்பட்ட திருப்பூா் மாநகராட்சி, தற்போது, குப்பைத்தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரதான கோரிக்கையான, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை திமுக அரசு மறந்து விட்டது. விவசாய மின் இணைப்பு தருவதாகக் கூறி, 4 ஆண்டுகளாகியும் வழங் கப்படவில்லை. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்வதற்கு விவசாயிகள் தொடா்ச்சியாக சட்டப் போராட்டம் நடத்தியும், இன்று வரை தீா்வு ஏற்படவில்லை. கள்ளுக்கான அனுமதி, ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகம், நொய்யல் நதி பராமரிப்பு என விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தோ்தல் வாக்குறுதிகளாக மட்டுமே துாங்கி கொண்டுள்ளன.
எனவே, வாக்குறுதிகளை, தோ்தல் அறிக்கையில் கொண்டுவந்து விட்டு, கோரிக்கைகள் நிறைவேறியதாக கூறுவதால் எந்த பயனும் இல்லை.
தோ்தலுக்கு முன், தொழில் துறையினா், விவசாயிகளின் கருத்துகளை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற்கு ஏற்ப தோ்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் வந்த அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.