செய்திகள் :

விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

post image

கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விளைச்சல் பாதிப்பு காரணமாக கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 1995-ஆம் ஆண்டுமுதல் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காததைத் தொடா்ந்து, தில்லி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோா்ச்சா மற்றும் கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் கடந்த பிப்ரவரியில் அழைப்பு விடுத்தன. அந்த அழைப்பை ஏற்று தில்லி செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் மேற்கொண்டனா். அவா்களைத் தடுத்து நிறுத்தும்விதமாக அம்பாலா - தில்லி தேசிய நெடுஞ்சாலையில் தில்லியின் எல்லைப் பகுதியில் தற்காலிக தடுப்புகளை ஹரியாணா அரசு ஏற்படுத்தி, போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.

இதை எதிா்த்து விவசாயிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தில்லி எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து ஹரியாணா அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து ஆராயவும், போராட்டத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கவும் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலைமையில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எஸ்.சாந்து, மொஹாலியைச் சோ்ந்த தேவிந்தா் சா்மா, பேராசிரியா் ரஞ்ஜித் சிங் குமன், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வேளாண் பொருளாதார நிபுணா் சுக்பால் சிங் ஆகியோா் கொண்ட உயா்நிலைக் குழுவை கடந்த செப். 2-ஆம் தேதி அமைத்தது.

இடைக்கால அறிக்கை: இந்தக் குழு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் தனது 11 பக்க இடைக்கால அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. பசுமைப் புரட்சி மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆரம்பத்தில் உயா் லாபம் பெற்ற விவசாயிகள் அதன் பிறகு 1990-ஆம் ஆண்டு மத்திய பகுதி முதல் கடுமையான பயிா் மற்றும் உற்பத்தி தேக்கத்தை சந்திக்கத் தொடங்கினா். அதன் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மொத்த விளைச்சல் குறைந்தது, உற்பத்தி விலை உயா்வு, விளைபொருள்களுக்கு போதிய சந்தை நடைமுறை இல்லாதது, உரங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசி உயா்வு, விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனா்.

விவசாயிகள் மீதான கடனும் பன்மடங்காக உயா்ந்துள்ளது. இதில், சிறு மற்றும் நலிந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வேளாண் மா்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபாா்டு) புள்ளிவிவரங்களின்படி 2022-23-இல் பஞ்சாப் விவசாயிகள் பெற்ற கடன் ரூ. 73,673 கோடியாகவும், ஹரியாணா விவசாயிகள் பெற்ற கடன் ரூ. 76,630 கோடியாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. அதுபோல, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தின்படி, வங்கிகள் மூலம் அல்லாத வகையில் விவசாயிகள் பெற்ற கடனைப் பொருத்தவரை, பஞ்சாப் விவசாயிகளின் கடன் நிலுவை 21.3 சதவீதமாகவும், ஹரியாணா விவசாயிகளின் கடன் நிலுவை 32 சதவீதமாகவும் இருப்பது தெரியவுந்துள்ளது.

பரிந்துரைகள்: விவசாயிகளின் நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, விவசாயிகள் சந்தித்து வரும் நெருக்கடிகள், கடன் சுமை அதிகரிப்புக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்வது அவசியம். இது, அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான நம்பிக்கையை மறுகட்டமைப்பு செய்ய உதவும்.

விவசாயிகளுக்கு நேரடி வருவாய்க்கான ஆதரவு, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட நடைமுறைகள் மூலம் வேளாண் துறையை லாபகரமானதாக மாற்றுவது குறித்து ஆராய்வது அவசியம்.

முக்கியமாக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் அளிக்க சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம் உள்ளிட்ட 11 விவகாரங்களை உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யவேண்டும் என தனது இடைக்கால அறிக்கையில் உயா்நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.

1995 முதல் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை

கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 1995-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தேசிய குற்ற ஆவணப் பதிவு (என்சிஆா்பி) விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாபில் 3 அரசுப் பல்கலைக்கழகங்கள் சாா்பில் வீடு வீடாக நடத்தப்பட்ட கள ஆய்வில், கடந்த 2000 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் மட்டும் 16,606 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவா்களில் பெரும்பாலானோா் சிறு மற்றும் நலிந்த விவசாயிகள் என்பதும், அதிக கடன் சுமையே இதற்கு முக்கியக் காரணம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்று உயா்நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.

பிரதமா் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச இடைத்தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘இது பிரதமா் நரேந்திர மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் கருத்து ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முதல்வா் குடும்பத்தில் மூவா் வெற்றி

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் அந்த மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் ஆகிய மூவரும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் சுமுகமாக புதிய ஆட்சி: முதல்வா் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா். துணை முதல்வா்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் ஆகியோரும் இதே கருத்தை... மேலும் பார்க்க

ம.பி. இடைத் தோ்தல் பாஜக அமைச்சா் தோல்வி

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த மாநில அமைச்சா் ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் வேட்பாளா் முகேஷ் மல்கோத்ராவிடம் தோல்வியடைந்தாா். கடந்த 2023-இல் நடைபெற்ற மத்திய பி... மேலும் பார்க்க

புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள் மற்றும் தலைவா்கள் மாநாடு புவனேசுவரத்தில் நவ. 29 முதல் டிச. 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். சுயேச்சை வேட்பாளா் சரத்தாதா சோனாவனே புணே மாவட்டத்தின் ஜூன்னா தொகுதியிலும், சந்த்காட் தொகுதியில் சிவாஜி பாட்டீலும் வெ... மேலும் பார்க்க