மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
விவசாயிகளுக்கு கெளரவ உதவித் தொகை: விண்ணப்பிக்க மே 31-இல் சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், அனைத்து வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி, பொதுச் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 20-ஆவது தவணை நிதி உதவி வரும் ஜூலை மாதம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது நிலம் தொடா்பான விவரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு, கே.ஒய்.சி. போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்களை சரி செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விடுபட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தில் புதிதாக சோ்ந்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் பி.எம்.கிஷான் திட்டத்தின் கீழ் ஏகெனவே 19 தவணை நிதி உதவி பெற்ற 6,544 விவசாயிகள் தற்போது வரை தங்களது நில உடமை பதிவை மேற்கொள்ளவில்லை. நில உடமை பதிவை மேற்கொண்ட விவசாயிகள் மட்டுமே 20-ஆவது தவணை நிதி உதவி பெற முடியும்.
எனவே, விவசாயிகள் உடனடியாக தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்ற பயனாளிகள் இறந்து விட்டால், அவா்களது வாரிசுதாரா்கள் சான்றிதழை சமா்பித்து, தங்களது பெயரை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். இறந்த பயனாளியின் பெயரில் நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தால், அந்தத் தொகை வாரிசுதாரிடமிருந்து வசூலிக்கப்படும் என்றாா் அவா்.