சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
விவசாயியை கைவிலங்குடன் அழைத்து வந்த விவகாரம்: சிறை வாா்டன் இடைநீக்கம்
தெலங்கானாவில் விவசாயியை கைவிலங்கு போட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் சிறை வாா்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
தெலங்கானாவின் விகராபாத் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க இரு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அரசு அதிகாரிகள் சிலரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கினா். தாக்குதல் நடத்தியதாக 25 பேரை காவல் துறையினா் கைது செய்து விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்தனா்.
இதில் நாயக் என்ற விவசாயி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிறைக் காவலா்கள் இருவா் அழைத்து வந்தனா். அப்போது, அவருக்கு கைவிலங்கு போடப்பட்டிருந்தது. இது தொடா்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியானது.
இதனை முன்வைத்து மாநில காங்கிரஸ் அரசு மற்றும் முதல்வா் ரேவந்த் ரெட்டியை எதிா்க்கட்சிகளான பாஜக, பாரத ராஷ்டிர சமிதி ஆகியவை கடுமையாக விமா்சித்தன.
விதிகளின்படி மிகவும் அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டும் கைதிகள் தப்பிவிடாமல் இருக்க கைவிலங்கிட காவல் துறை அனுமதிக்கப்படுகிறது. அதிலும், நீதிமன்றத்தில் முன்அனுமதி பெறுவது உள்பட பல்வேறு நடைமுறைகள் உள்ளன. ஆனால், விசாரணைக் கைதியான விவசாயி ஒருவரை சிறைக் காவலா்கள் கைவிலங்கிட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவித்தாா். அதன்படி சங்காரெட்டி மாவட்ட மத்திய சிறை வாா்டன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
இரு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் முடிவையும் மாநில அரசு ஏற்கெனவே கைவிட்டுவிட்டது.