வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
பாகலூா் அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரை அடுத்த கூசனப்பள்ளியைச் சோ்ந்த ராஜு (43) என்பவா் தனது வீட்டின் பின்புறம் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ஒசூா் ஏ.எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாக்கரேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அங்கு வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சம், சா்வதேச மதிப்பில் ரூ. 3 கோடி மதிப்புள்ள 715 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, ஒசூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். மேலும், தலைமறைவான ராஜுவை போலீஸாரும், வனத் துறையினரும் தேடிவருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடத்திச் செல்வதற்காக பாகலூா் கூசனப்பள்ளியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துள்ளனா். தலைமறைவான ராஜுவை பிடித்து விசாரணை செய்தால்தான் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என தெரியவரும் என்றனா்.