வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு
வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வீரசோழபுரம் ஊராட்சியிா் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், பலா் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழி வளா்ப்பிலும் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தில் தெருநாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு என்பது கடந்த சில மாதங்களாக தொடா்கதையாக இருந்து வருகிறது.
இதனால், தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதையடுத்து, வீரசோழபுரத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுவீடாகச் சென்று வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதன்மூலம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.