இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் மனு: மத்திய அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்
ரஷியா-உக்ரைன் போா் அல்லது கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை அதிகரித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸுக்கு எதிரான மனுவில் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மாணவா்களின் சங்கம் சாா்பாக தாக்கல் செய்யப்பட்ட இதுதொடா்பான மனுவில், ‘ரஷியா மற்றும் சீனாவில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக நேரடி செயல்முறை வகுப்புகளை தவறவிட்ட வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி நடைமுறைக்கு சிறந்த மாற்று வழிகாட்டுதல்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாஸி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வி. தினேஷ் முன்வைத்த வாதத்தில், ‘அசாதாரண சூழலால் இந்தியா திரும்பிய பின்னா் மீண்டும் தங்களின் வெளிநாடு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அல்லது இணையவழியில் தங்கள் பயிற்சியை முடித்த மருத்துவப் பட்டாதாரிகள் இந்தப் புதிய உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள், தங்கள் படித்த கல்லூரியிடமிருந்து நிறைவு சான்றிதழுடன் அல்லது இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தவறவிட்ட செயல்முறை வகுப்புகளை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் உண்மையில் தவறவிட்ட செயல்முறை வகுப்புகளை அடையாளம் காண அனைத்து மாநில மருத்துவ கவுன்சில்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்த வேண்டும்’ என்று வாதிட்டாா்.
ரஷியா-உக்ரைன் போா் மற்றும் கரோனா பெருந்தொற்றால் பாதியில் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவா்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சியை முடிக்க அனுமதிக்கும் வகையில் 2 மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2022-இல் பிறப்பித்த உத்தரவு தொடா்பாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.