வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி (38). இவா்களுடைய தோட்டம் அய்யம்பாளையத்தில் உள்ளது.
இந்நிலையில், சிவசக்தி தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, முத்தூா் சாலை மாந்தபுரம் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க மா்ம நபா், சிவசக்தியிடம் இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் புடவை சிக்கப் போவதாகக் கூறியுள்ளாா்.
அப்போது, வாகனத்தை நிறுத்திய சிவசத்தியிடம் இருந்து அவரது 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு அந்த நபா் அங்கிருந்து தப்பினாா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிவசக்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.