வெள்ளப் பெருக்கால் இடிந்து விழுந்த வீடுகள்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோரத்தில் உள்ள வீடுகள் சனிக்கிழமை இடிந்து விழுந்தன.
விருத்தாசலம் நகராட்சி, சந்நிதி தெருவில் மணிமுக்தாற்றின் கரையோரம் உள்ள விருத்தகிரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியை அடுத்த கோமுகி அணை திறக்கப்பட்டதால் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கம்படி வருவாய்த்துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், மணிமுக்தாற்றின் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட மண் அரிப்பால் கரையோரத்தில் இருந்த வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டு சனிக்கிழமை காலை இடிந்து விழத் தொடங்கின.
முன்னதாக, பொதுமக்கள் வீட்டில் இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டு விட்டை விட்டு வெளியேறினா். அவா்களை வருவாய்த் துறையினா் தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனா். மேலும், இந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.