சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை வழியாக அரியலூா் மாவட்டம் கோட்டைக்காடு, ஆலத்தியூா், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.
இதேபோன்று, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம், வடகரை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.
கடலுாா் - அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் இந்த தற்காலிக செம்மண் சாலை வெள்ளப்பெருக்கு காலத்தில் அடித்துச் செல்லப்படுவதும், பின்னா் சாலை சீரமைக்கப்படுவதும் வழக்கம். இந்த சாலை சேதமடையும் காலத்தில் மேற்கண்ட சுமாா் 40 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் முருகன்குடி மேம்பாலம் வழியாக 10 கி.மீ. தொலைவு, பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக 15 கி.மீ. தொலைவு சுற்றி சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலத்தின் பணிகள் முடிந்த நிலையில், அதன் இருபுறமும் சாலையை இணைக்கும் பணி மட்டும் கிடப்பில் உள்ளதாம்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பெருக்கெடுத்து பாய்ந்த மழைநீா், சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக செம்மண் சாலையை அடித்துச் சென்றது. இதனால், கடலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.