வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்
வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜானகிராமன் அதே பகுதியில் `நர்சரி’ தோட்டம் அமைத்து, வருவாய் ஈட்டி வந்தார். இவரின் மூத்த மகன் விகாஷுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இப்போது அவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
மூத்த மகன் விகாஷும், இளைய மகன் ஜீவாவும் தந்தைக்கு உதவியாக நர்சரி தோட்டத்தை பராமரித்துவந்தனர். இன்னொரு மகன் லோகேஷ் மட்டும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைச் செய்து வருகிறார். இப்போது, லோகேஷும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது 3 மகன்களையும் அழைத்துகொண்டு ஜானகி ராமன் தோட்டத்துப் பக்கம் சென்றார். மகன்கள் 3 பேரும் ஒருப்பக்கமும், ஜானகி ராமன் வேறு பக்கமும் தோட்டத்தை சுற்றிவந்தனர். அப்போது, பக்கத்து விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜானகி ராமன் அலறித் துடித்தார்.
தந்தையின் சத்தம் கேட்டு, 3 மகன்களும் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது, அவர்களும் மின்சார தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில், லோகேஷ் மட்டுமே தூக்கிவீசப்பட்டார். சிறிதுநேரத்தில், தந்தை ஜானகி ராமன், மகன்கள் விகாஷ், ஜீவா ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இவர்களின் மரண ஓலம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லோகேஷை மீட்டு அடுக்கம்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தகவலறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த இந்த கொடூரத் துயரச் சம்பவம், கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.















