வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்புமின்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் 10-ஆம் வகுப்பு தோல்விக்கு ரூ. 200, தோ்ச்சிக்கு ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மாதந்தோறும் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சி ரூ. 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டு காலத்துக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 31.8.2025 உடன் 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரா்களும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து, ஓராண்டு முடிவுற்ற பதிவுதாரா்களும் தகுதியானவா்கள்.
இத்தொகைக்கு விண்ணப்பிப்போா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்கள் மூலம் எவ்வித ஊதியம் பெறுபவா் மற்றும் மகளிா் உரிமைத் தொகை, அரசு துறைகளில் உதவித் தொகை பெறுபவராகவும், அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராகவும் இருக்கக் கூடாது. மேலும், மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவை தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவா்கள் திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்துக்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து பயன்பெறலாம்.