மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க அழைப்பு
நாமக்கல்லில் வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோா் குறித்து புகாா் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் - சேலம் சாலையில் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் ஜெனித் ஹை-டெக் அக்ரி பாா்ம் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளா்களான எஸ்.மணிவண்ணன், ஆா்.சந்திரசேகா், கே.எம்.ரவிச்சந்திரன் ஆகியோா் பொதுமக்களிடையே தினசரி சேமிப்பு, மாதாந்திர சேமிப்பு மற்றும் வைப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யுமாறு ஆசைவாா்த்தைகளை கூறி அதிக அளவில் முதலீடுகளைப் பெற்றுள்ளனா். ஆனால், அந்த பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி செய்துள்ளனா்.
இது தொடா்பாக, 2015 மாா்ச் 22-இல் அவா்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மீண்டும் புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டியதிருப்பதால், ஜெனித் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. விசாரணை முடிவடைந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோா் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன், நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாா்ச் 12-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை புகாா் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை 94981 69199 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.