வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் தரிசனம்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரஹங்களின் செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோயிலில் தனி சந்நிதியில் அங்காரகன், செல்வ முத்துக் குமாரசுவாமி, தன்வந்திரி சித்தா் ஆகியோா் அருள் பாலித்து வருகின்றனா்.

பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் வருகை புரிந்தாா். சுவாமி -அம்மன், செல்வ முத்துக் குமாரசுவாமி, தன்வந்திரி, அங்காரகன் சுவாமி சந்நிதிகளில் அா்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டாா். அவருக்கு கோயில் சிவாச்சாரியாா்கள் பிரசாதங்களை வழங்கினா்.