செய்திகள் :

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய, விற்ற பங்குகள்..!

post image

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். 21-ம் ஆண்டு சிறப்பிதழ் அறிவிப்பைக் கவனித்தவர், ‘‘சூப்பர்... அசத்துங்கள்...’’ என்று பாராட்டினார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, சூடாக ஏலக்காய் டீயைத் தந்தோம். வாங்கிப் பருகிக்கொண்டே நமக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

‘‘நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாள்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. நவம்பர் 13-ம் தேதி வர்த்தகத்தில் நிஃப்டி 26,000-ஐ நெருங்கி வந்திருக்கிறது. இந்த ஏற்றத்துக்குச் சில காரணங்கள் இருக்கின்றன. முதலில், சில்லறைப் பணவீக்க விகிதம் 0.25% அளவுக்குக் குறைந்திருப் பதால், வரும் டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகச் சந்தை கருதுகிறது. வட்டிக் குறைப் புக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், பணவீக்கம் குறைந்திருப்பதை ஒரு நல்ல முன்னேற்றமாக முதலீட் டாளர்கள் பார்க்கின்றனர்.

மேலும், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளும் ஏற்றத்தில் இருப்பதால், இந்தியச் சந்தைக்குக் கூடுதல் உற்சாகம் கிடைத்திருக்கிறது. இதைத் தாண்டி, நவம்பர் 12-ம் தேதி கச்சா எண்ணெய் விலை சுமார் 4% குறைந்திருப்பது ஒரு போனஸ் ஆகும். சந்தை மீண்டும் பழைய உச்சத்தை நெருங்கி வருகிறது. ஆனால், நிஃப்டிக்கு 26,000 புள்ளிகள் என்ற நிலையில் கடும் ரெசிஸ்டன்ஸ் இருப்பதால், அதைத் தாண்டி மேலே செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.’’

குரோவ் பங்குகளுக்குப் பலமான வரவேற்பு கிடைத்துள்ளதே?

‘‘குரோவ், பங்குத் தரகு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் துறையில் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனம் ஆகும். டிஜிட்டல் முறையில் தரகு சேவைகளை வழங்கி, குறுகிய காலத்திலேயே அட்டகாசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஐ.பி.ஓ-விலேயே குரோவ் பங்குகளுக்கு 17.6 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. ஐ.பி.ஓ-வில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட குரோவ் பங்குகள், நவம்பர் 12-ம் தேதி பங்குச் சந்தையில் 114 ரூபாய்க்குப் பட்டியலிடப் பட்டன.

ஆக, பட்டியலிடப்பட்ட விலையிலேயே ஐ.பி.ஓ முதலீட்டாளர்களுக்கு 14% லாபம் கிடைத்தது. அதற்குப் பிறகும்கூட குரோவ் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டன. நவம்பர் 12-ம் தேதியே குரோவ் பங்கு விலை 134.40 ரூபாய் வரை உயர்ந்தது. நவம்பர் 13-ம் தேதியும் உயர்ந்த குரோவ் பங்கின் விலை 153.50 ரூபாய் வரை சென்றது. ஆக, ஐ.பி.ஓ-வில் வாங்கியவர் களுக்கு இதுவரை 50%-க்கு மேல் லாபம் கிடைத்திருக்கிறது.’’

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறைந்துள்ளதே?

‘‘அக்டோபர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பற்றிய தரவுகளை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பான ஆம்ஃபி வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 19% குறைந்து, 24,691 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய செப்டம்பர் மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 30,422 கோடி ரூபாய் முதலீடுகள் வந்தன. அக்டோபர் மாதத்தில் சற்று குறைந்திருப்பதற்கு பண்டிகைக் காலம் என்பது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஈக்விட்டி ஃபண்டுகளில் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள்தான் அதிகளவில் முதலீட்டாளர் களை ஈர்த்துள்ளன. ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டு களுக்கு வந்த முதலீடுகள் 27% வளர்ந்து, 8,928 கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல, ஹைப்ரிட் ஃபண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 51% வளர்ந்து, 14,156 கோடி ரூபாயாக உள்ளன. மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடுகளின் வேகம் குறைந்துள்ளது.

மிட்கேப் ஃபண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 25% குறைந்து, 3,807 கோடி ரூபாயாக உள்ளன. ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 20% குறைந்து, 3,476 கோடி ரூபாயாக உள்ளன. கடன் சந்தை ஃபண்டுகளை எடுத்துக்கொண் டால், அதிகபட்சமாக லாங் டியூரேஷன் ஃபண்டுகளில் இருந்து 942 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு இ.டி.எஃப் திட்டங் களுக்கு 7,743 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருக்கின்றன.’’

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய, விற்ற பங்குகள் என்னென்ன?

‘‘கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தை 4.5% ஏற்றம் கண்டது. குறிப்பாக, அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் வாங்கத் தொடங்கியதே ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் மாதத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளில் அதிகமாகப் பங்குகளை வாங்கியுள்ளன. இதே துறைகளில் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை விற்கவும் செய்துள்ளன. ஒவ்வொரு ஃபண்ட் மேனேஜரும் ஒவ்வொரு விதமாக முதலீட்டு முடிவு எடுப்பதே இதற்குக் காரணம். இது இயல்பான விஷயம்தான்.

ஆனால், ஓரளவுக்கு நியாயமான மதிப்புள்ள பங்குகளை பல ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கி உள்ளனர் எனலாம். பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி பவர், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், என்.டி.பி.சி, பவர் கிரிட், ட்ரென்ட், கோல்கேட் பாமோலிவ், ஐ.டி.சி, எல்&டி ஃபைனான்ஸ், டிக்ஸன் டெக்னாலஜீஸ், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஆஃப்ல் 3ஐ, கோட்டக் மஹிந்திரா பேங்க், ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், தைரோகேர் டெக்னாலஜீஸ், மேன்கைண்ட் ஃபார்மா, ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி, எட்டர்னல், ராம் ஃபைனான்ஸ், டி.சி.எஸ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கூடுதலாக வாங்கியுள்ளன.

மறுபக்கம், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், எல்&டி, மாருதி சுஸூகி, என்.டி.பி.சி, டி.சி.எஸ், பேடிஎம், ஹூண்டாய் மோட்டார், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.பி.சி.எல், டாக்டர் ரெட்டீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், யூனோ மிண்டா, ஜிண்டால் ஸ்டீல், ஐ.டி.சி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிக்கல்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்றுக் குறைத்துள்ளன.

கனரா பேங்க், எம்.சி.எக்ஸ், பேர்ல் குளோபல், ஆதித்ய பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ், ஏஞ்சல் ஒன், ராம் ஃபைனான்ஸ், தைரோகேர், எஸ்.ஜே.எஸ் என்டர்பிரைசஸ், ஷில்பா மெடிகேர், யூனோ மிண்டா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், சி.இ.எஸ்.சி, அதானி பவர், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஷைலி இன்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எட்டர்னல் ஆகிய பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக வாங்கியுள்ளன.

டாடா எலெக்ஸி, எம்பசிஸ், அவந்தி ஃபீட்ஸ், கரூர் வைஸ்யா பேங்க், இந்தியன் பேங்க், யதர்த் ஹாஸ்பிட்டல், டால்மியா பாரத், ஐ.ஆர்.இ.டி.ஏ, ஹெச்.சி.சி, பிரீமியர் எனர்ஜீஸ், வெல்ஸ்பன் கார்ப், ஸைடஸ் லைஃப்சயின்சஸ், டிராவல் ஃபுட் சர்வீசஸ், கோல்கேட் பாமோலிவ், பஜாஜ் ஃபின்சர்வ், சாய் சில்க்ஸ், சுமிடோமோ கெமிக்கல், அதானி போர்ட்ஸ், சியட், ஏ.சி.சி, கிளென்மார்க் ஃபார்மா, சுந்தரம் ஃபைனான்ஸ், சுஸ்லான் எனர்ஜி, அசோக் லேலாண்ட், என்.எம்.டி.சி, பெர்ஜர் பெயின்ட்ஸ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறியுள்ளன.’’

மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளதே?

“கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல், இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால், பல்வேறு துறைகளுக்குப் பாதிப்பு இருந்தாலும்கூட, ஜவுளி, இறால், நகைகள் & ரத்தினக் கற்கள் போன்ற குறிப்பிட்ட சில துறைகளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்தத் துறைகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. இந்த நிலையில், ஏற்றுமதியாளர் களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25,060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், முதல்முறை ஏற்றுமதியாளர்கள், அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்கிறது” என்றவர், ‘புதுப்பொலிவு இதழில் நாம் சந்திப்போம்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இந்தியப் பங்குச் சந்தை: வீழ்ச்சியா, வாய்ப்பா? - உங்கள் பணம் எங்கே செல்கிறது?

‘சென்செக்ஸ் 83,000 புள்ளிகள்’, ‘நிஃப்டி 25,500-ஐ நெருங்குகிறது’ – இது போன்ற செய்திகளைத் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் தினமும் பார்க்கிறோம். சில நாட்கள் சந்தை ராக்கெட் வேகத்தில் ஏறும்; சில நா... மேலும் பார்க்க