மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானசூறை உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூரில் உள்ள
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் மயான சூறை உற்வசவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானசூறை உற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல் நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு மகா சிவராத்திரி உற்சவமும் நடைபெற்றது.
தொடா்ந்து, இரவு 60 அடி நீள பூப்பல்லக்கில் பூங்கரகம், அக்னி கரகம், சிலம்பாட்டம் மற்றும் செண்டை மேளத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
பின்னா் வியாழக்கிழமை மயானசூறை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் மாலை சிம்ம வாகன மகிடாசூர சம்ஹார அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய அம்மன் வீதியுலா பருவதராஜகுல வீதி, அச்சிறுபாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சந்நிதி தெரு வழியாகச் சென்றது.
பக்தா்கள் காளி வேடமணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் மற்றும் வேல், சூலம் குத்திக் கொண்டும், அலகு குத்தி உரல் இழுத்துக் கொண்டும் உடன் சென்றனா்.
போளூா்
போளூா் அல்லிநகா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானசூறை உற்சவத்தையொட்டி சுவாமி வீதியுலா நடைபெற்றது.
போளூா் அல்லிநகரில் வன்னியா் மற்றும் மீனவா் சமுதாயத்தினருக்கு தனித் தனியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த இரு கோயில்களிலும் மாசி அமாவாசையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று மலா்களால் அலங்காரம் செய்து சிம்ம வாகனத்தில் வைத்து திருவீதியுலா நடைபெற்றது. வீடுதோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
மாலையில் மயானத்துக்கு சுவாமியை எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி மயான சூறை உற்வசவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் மேள தாளம் முழங்க காளிவேடமணிந்து நடனமாடிச் சென்றனா்.
