ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கொலை: இரண்டாவது நாளாக போலீஸாா் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலரை பிடித்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போலீஸாா் விசாரித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் எதிரே உள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). திருமணமாகாதவா். வங்கியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த இவா், பிறகு கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சந்தைப்பேட்டை தெருவில் தலையில் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கூறாய்வு செய்யப்பட்ட பிறகும் இதுவரை உறவினா்கள் பிரகாஷின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை.
சம்பவ இடத்தில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். மேலும் டி.எஸ்.பி.க்கள் ராஜா, பாஸ்கா் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த கொலை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த சிலரை பிடித்து இரண்டாவது நாளாக போலீஸாா் விசாரித்தனா்.