ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்
நமது நிருபர்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை விரைந்து நியமிக்கக் கோரி, "ஹிந்து தர்ம பரிஷத்' என்ற அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்குரைஞர் குமணன் ஆஜராகி முன்வைத்த வாதம்:
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த நவ.5}ஆம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை அதன் வரம்புக்குள்பட்ட மொத்தம் 31,163 கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியது. பரவலான அறிவிப்புக்குப் பின்னரும் 20,600 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. சமீபத்திய தரவுகளின்படி, 7,661 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2,902 கோயில்களில் அறங்காவலர் நியமனங்களை ஆய்வு செய்து, இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, 1,284 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய முடியாத நிலையில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. நியமனங்களைத் தொடர இந்த வழக்குகள் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜெய்சுகின் ஆஜராகிவாதிடுகையில், "அறங்காவலர் இல்லாததால் பல கோயில்கள் பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ளது.
கோயில்களை சுத்தம் செய்யக்கூட அத்தியாவசியப் பொருள்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் கோயில்கள் மூலம் வரும் காணிக்கையில், ஒரு சிறு தொகையை பராமரிப்பின்றி உள்ள கோயில்களுக்கு செலவிட வேண்டும்' என்றார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியதாவது:
மனுதாரரின் கோரிக்கைகள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடம் பெறவில்லை. அதற்கென தனியாக மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் அதுபற்றிய விவரத்தை கேட்கலாம். தற்போது, இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது. அறங்காவலர் நியமன நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பான பிரமாணப் பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அறங்காவலர் நியமன நடைமுறைகளை முடிக்க சற்று காலம் தேவைப்படும் என தமிழக அரசு தரப்பு கூறுகிறது. எனவே, அதற்கான கால அவகாசத்தை வழங்கியும், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களையும், இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.