ஹூப்ளி ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு
சென்னை: கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் இடையே இருமாா்க்கத்திலும் வாராந்திர விரைவு ரயில்கள் (எண்:17311, 17312, 22697, 22698) இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் டிச.26-ஆம் தேதி முதல் ஜன.19-ஆம் தேதி வரை தற்காலிகமாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இதேபோன்று, யஷ்வந்த்பூா் - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் டிச.29 முதல் ஜன.24-ஆம் தேதி வரை படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டிக்கு பதிலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும்.
வழக்கம்போல் இயக்கம்
பேசின்பாலம் - வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இந்நிலையில், இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் சென்னை சென்ட்ரல், பெரம்பூா் வந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.