செய்திகள் :

இனி உங்கள் போன் நம்பருக்கும் கட்டணம் கட்டணும்!: 'டிராய்' புதிய பரிந்துரை

post image

புதுடில்லி: இனி மொபைல் மற்றும் லேண்ட்லைனில் பேசுவதற்கு ரீசார்ஜ் மட்டுமல்லாமல் மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் வசூலிக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சிம் கார்டினை சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக வழங்கினாலும், மொபைல் போன்களில் பிறரை தொடர்புகொள்ள ரீசார்ஜ் செய்வது கட்டாயம். ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு விதமான கட்டணங்களை நிர்ணயித்து ரீசார்ஜ் கட்டணங்களை வசூலித்து வருகிறது. அதிலும் இன்டர்நெட் சேவைக்கு கூடுதலாகவும் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். 
இந்த நிலையில் இனி இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது. இந்த கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை வசூலித்து கொள்வார்கள். இதற்காக ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருகிறது.
எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது.