செய்திகள் :

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

post image

மதுரை: கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கில் விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சுகாதார பணிகளில் சுணக்கமின்றி துாய்மைப்பணியாளர்கள் பணியாற்றினர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள், சுகாதாரமில்லாத சூழலில் பணியாற்றி வரும் நிலையில், நோய்த்தொற்றுக்கான ஆபத்து அதிகமாக உள்ள நிலையிலும் தொடர்ந்து பணியாற்றினர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி விருதுநகர் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணை வந்தது. அதில், தூய்மை பணியாளர்கள் மீண்டும் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தூய்மை பணியாளர்கள் ஊக்கத்தொகை வழங்க கோரி மீண்டும் தனித்தனியே சுகாதாரத்துறை செயலரிடம் மனு வழங்கவும் ஆணையிட்டுள்ளது.