செய்திகள் :

31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

post image

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் 31.20 கோடி பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர். ஓட்டளித்த பெண் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

நாளை (ஜூன் 04) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராஜிவ் குமார் கூறியதாவது: 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஓட்டுப்பதிவில் 64.20 கோடி வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் வாக்காளர் 31.20 கோடி பேர். அதிக பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

1.75 மடங்கு அதிகம்

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது. ஜி7 நாடுகளின் ஓட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விட, இந்தியாவில் ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். தேர்தல் கமிஷன் கடும் சவால்களை சந்தித்து தேர்தலை நடத்தி உள்ளது. சிலர் தேர்தல் கமிஷனை விமர்சிப்பது சரியா?. வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு

ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.