செய்திகள் :

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரிய வழக்கு: கோவை தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

post image

சென்னை: பள்ளியில் இருந்து ஒரு கிமீ தூரத்துக்கு அப்பால் வீடு இருந்தாலும், காலியிடம் இருப்பதால் இரண்டு மாணவிகளுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என, கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த இளங்கோ என்பவர் தனது மகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கக்கோரி தனியார் பள்ளிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அவரது வீடு உள்ளதாகக் கூறி அவரது மகளுக்கு பள்ளி நிர்வாகம் சேர்க்கை வழங்க மறுத்தது. இதேபோல, கோவையைச் சேர்ந்த தீபக் என்பவரது மகளுக்கும் இதே காரணத்தைக் கூறி மற்றொரு தனியார் பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. முத்து, “அந்த இரு மாணவிகளின் வீடுகளும் பள்ளியில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு அப்பால் இருந்தாலும் குறிப்பிட்ட அந்த இரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எனவே மாணவிகள் இருவரையும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன், அந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “பள்ளியில் இருந்து ஒரு கிமீ தூரத்துக்கு அப்பால் வீடு இருந்தாலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு காலியிடம் இருந்தால் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என அந்த இரு தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் அந்த இரு மாணவிகளின் விண்ணப்பத்தையும் பரிசீலித்து சேர்க்கை வழங்க அந்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்கள் இருவரும் வரும் ஜூன் 20ம் தேதியன்று பள்ளி நிர்வாகங்களை அணுக அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த இரு மாணவிகளின் சேர்க்கையை உறுதிப்படுத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி , விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்..