செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மதுவிலக்கு திருத்தச் சட்டம் கீழ் நடவடிக்கை

post image

கள்ளக்குறிச்சி: தமிழக அரசின் மதுவிலக்குத் திருத்தச் சட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி-யான அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதால் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 29.6.2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவுக்கு ஆளுநரால் ஜூலை 11-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜூலை 14-ம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.அதன்படி, 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபான இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல், சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல், சட்டவிரோதமான மதுபான ஆலை அல்லது மதுபான நொதி வடிப்பாலையைக் கட்டுதல், விற்பனைக்காக சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்குக் குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனிடையே, திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாகக் கண்டறியப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி-யான அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.