செய்திகள் :

கொடூரமான வெறுக்கத்தக்க சம்பவம்’ - ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

post image

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான, வெறுக்கத்தக்க முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி அக்கொலை சம்பவத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.முன்னதாக நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.