செய்திகள் :

சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை: ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது

post image

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சித்த மருத்துவர், அவரது மனைவி கொல்லப்பட்ட வழக்கில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் சிவன்நாயர் என்பவர், மனைவி பிரசன்னா குமாரியுடன் வசித்து வந்தார். இருவரும் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். சிவன்நாயர் ஓய்வுபெற்ற ராணுவ வீரராவார். பிரசன்னா குமாரி மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிவன்நாயர், வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மகன் ஹரி ஓம் ஸ்ரீ, அண்ணனூரில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.மகள் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை, மகன் வெளியே சென்றிருந்த வேளையில் சிகிச்சை பார்ப்பது போல வந்தவர்கள், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலையடுத்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், இருவரின் உடல்களையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களையும் சேகரித்தனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரடியாக பார்வையிட்டு கொலையாளிகளை துரிதமாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றவர்கள், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்றும், குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கொலை நடைப்பெற்ற இடத்தில் செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் மகேஷ் என்பவரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த நபர் சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று Gpayயில் பணம் செலுத்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மகேஷுக்கு பணம் டெபிட் ஆகியும் சித்த மருத்துவரின் அக்கவுன்டில் கிரெடிட் ஆகவில்லை. மூன்று முறை Gpayயில் பணம் டெபிட் ஆகியும் சித்த மருத்துவரின் -அக்கவுன்டில் கிரெடிட் ஆகாத நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பணத்தை கொடுத்து விட்டுதான் செல்ல வேண்டும் எனக்கூறி தாக்க முயன்ற சித்தமருத்துவர், அவரது மனைவியை மகேஷ் என்பவர் கொலை செய்துள்ளார். கொலை செய்த மகேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.