செய்திகள் :

சென்னை | வழக்கறிஞரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்: கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கைது

post image

சென்னை: ரவுடி பெயரை கூறி வழக்கறிஞரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகுமார் (35). இவர், மேற்கு அண்ணா நகர், 14-வது தெருவில் அலுவலகம் வைத்துள்ளார். இவரது அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை, அடையாளம் தெரியாத 9 பேர் வந்துள்ளனர். அங்கிருந்த உதவி வழக்கறிஞ ரான கார்த்திக் என்பவரிடம், விஜயகுமார் குறித்து கேட்டுள்ளனர்.அப்போது, அங்கு வந்த விஜயகுமாரிடம், பிரபல ரவுடியின் பெயரைக் கூறி, ஒருவர் போனை கொடுத்தார். போனில், எதிர் முனையில் பேசியவர், தான் சோழவரம் ரவுடி சேதுபதி என்றும், பணம் கொடுக்கும்படி கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, விஜயகுமார் அளித்த புகாரின்படி, திருமங்கலம் போலீஸார் அங்கிருந்த 9 பேரை யும் மடக்கி பிடித்து, காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

அவர்கள் சோழவரம் ரவுடி சேதுபதியின் கூட்டாளியான, நெற்குன்றத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (22),என்பதும், இவர் மீது, குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது. மற்ற 8 பேரும், மதுரவாயலில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. 9 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி சேதுபதியை தேடி வருகின்றனர்.