செய்திகள் :

துபாயிலிருந்து ‘தங்க’ மிக்ஸி கடத்தி வந்த பயணி; மடக்கிப் பிடித்த திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள்

post image

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்திறங்கியது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக்ஸியின் உள்ளே வழக்கமாக காப்பரில் செய்யப்படும் காயில் முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் எலெக்ட்ரிக் வயருக்குள் தங்கம் கடத்தி வந்தவர்கள் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.சுங்கத்துறை அதிகாரிகளின் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளால் நூதன முறையில் தங்கத்தைக் கடத்தி வரும் சம்பவங்கள் திருச்சி விமான நிலையத்தில் அதிகரித்து வருகிறது. வயிற்றுக்குள் தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தி வந்தவர்கள் தொடர்ச்சியாக பிடிபட்டு வந்ததால், தற்போது உத்தியை மாற்றி வீட்டு உபயோக பொருட்கள் ஸ்பேர் பார்ட்ஸ் வடிவில் தங்கத்தைக் கடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

வீட்டு உபயோக பொருட்கள், லேப்டாப் என உள்ளிட்ட சாதனங்களில் ஸ்பேர் பார்ட்ஸ் வடிவில் தங்கத்தை கடத்தி வருவதால் நேர்மையாக வரக்கூடிய பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து வந்த பயணி ஒருவர் கார் வாஷ் கருவி ஒன்று வாங்கி வந்திருந்தார். அந்தக் கருவியை பிரித்துப் பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள், அதில் கடத்தல் பொருள் ஏதும் இல்லை என்று உறுதியானதும், பிரித்த கருவியை அப்படியே அந்தப் பயணியிடம் அள்ளிக் கொடுத்து வெளியில் சென்று அதை பொருத்திக்கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார்கள்.இதனால் ஆத்திரம் கொண்ட அந்தப் பயணி சுங்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படி, பணத்தைக் கொட்டி ஆசையாக வாங்கி வரக்கூடிய பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வீணடித்து விடுவதாகவும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.