செய்திகள் :

பாக்டீரியாக்களை அழிக்கும் சாண பெயின்டுக்கு 'டிமாண்ட்

post image

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என, முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளும் மனிதர்களுக்கு பயன்படும். அது போன்று பசுவின் சாணமும், பல விதங்களில் பயன்படுகிறது.

ஹிந்து மதத்தில், பசுக்களுக்கு புனிதமான இடம் உள்ளது. பசுவிடம் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். பசுவுக்கு மட்டுமின்றி, அதன் சாணத்துக்கும் அதே அளவு மகத்துவம் அளிக்கப்படுகிறது.

பூஜைகள், திருவிழாக்கள், திருமணம் உட்பட, சுப நிகழ்ச்சிகளில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதை இப்போதும் காணலாம்.


வறட்டி



சாணத்தால் தயாரிக்கப்பட்ட வறட்டியை எரித்தால், புனிதமான திருநீறாக மாறுகிறது. வறட்டி பல தேவைகளுக்கு பயன்படுகிறது. கிராமங்களில் இன்றும் கூட, அடுப்பு எரிக்க வறட்டி பயன்படுத்தப்படுகிறது. சாணத்தை வைத்து, விளக்கு, கலை பொருட்கள், அலங்கார பொருட்கள், கடவுள் சிலைகள் என, பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சாணம் பயன்படுத்தி, பெயின்ட் தயாரிக்கப்படுகிறது.

தட்சிண கன்னடா, மங்களூரின் ஹளெயங்கடி கிராமத்தில் குடிசை தொழிலில், பசுவின் சாணத்தால் தயாரிக்கும் இயற்கையான பெயின்ட் மிகவும் பிரபலமாக உள்ளது. 'சன்னிதி பிரக்ருதி' என்ற பிராண்ட் பெயரில், மார்க்கெட்டில் விற்கப்படும் பெயின்ட் இயற்கையான நிறம் கொண்டதாகும். பூஞ்சைகள், பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. எந்த வாசனையும் இல்லாதது. செலவும் குறைவு. இந்த தொழிற்சாலையை அக்ஷதா என்பவர் நடத்துகிறார்.


டிமாண்ட்



சிறிய அளவில் குடிசை தொழிலில் தயாரிக்கப்படும், சாண பெயின்டுக்கு கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. 

ஏனென்றால் கிருமிகளை அழிப்பதுடன், கதிர் வீச்சை தடுக்கிறது. வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கிராமத்துக்கு வந்து சன்னிதி பிரக்ருதி பெயின்ட் வாங்குகின்றனர்.

இதுதொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் அக்ஷதா கூறியதாவது:

கடந்த 2022ல், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா நேஷனல் ஹேண்ட்மெய்டு பேப்பர் இன்ஸ்டியூட்டில், நடந்த பயிற்சியில் பங்கேற்றேன். இங்கு பயிற்சி பெற்ற பின், சொந்தமாக தொழில் துவங்கினேன். டபுள் - டிஸ்க் ரிபைனர் பயன்படுத்தி, பசுவின் சாணம் பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் வெவ்வேறு வழிகளில், பெயின்ட் தயாரிக்கப்படுகிறது.

அபாயமான எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை. இயற்கையான நிறம் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த தொழிலுக்கு 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். உள்ளூர் விவசாயிகளிடம் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து, சாணம் வாங்குகிறோம்.

தொழிற்சாலைக்கு தேவையான உபகரணங்கள், தமிழகத்தின் கோவையில் இருந்து வாங்கப்பட்டன. 


ஒரு லிட்டர் ரூ.190



ஒரு லிட்டர் சாண பெயின்ட் விலை, ஜ.எஸ்.டி., சேர்த்து, 190 ரூபாயாகும். ஆரம்பத்தில் இப்பகுதியின், சில வீடுகள், கோவில்களுக்கு இலவசமாக பெயின்ட் வழங்கினோம். 

மக்கள் இதை பயன்படுத்திய பின், வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததை உணர்ந்தனர். அதன்பின் விற்பனை அதிகரித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.