புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் க...
காவிரிக் கரையோர விதை; பேயாறும் பஞ்சமும்... கைகொடுத்த ஒரே உணவு `இருளைக்கிழங்கு' | மேட்டூர் அணை ஓசை 38
விமானப்படை வீரர் மேட்டூர் தனபாலன்
தற்போது அணை நீரில் மூழ்கி கிடக்கும் சாம்பள்ளி கிராமத்தில் முன்பு பிறந்த மண்ணின் மைந்தர்களான சகோதரர்கள் இருவரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாம்பள்ளி - காட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட திரு தனபாலன் மற்றும் திரு ஜெயச்சந்திரன் ஆகியோரே அந்த இருவர். முன்னவர் சேலத்திலும் இளையவர் மேட்டூரிலும் வசிக்கிறார்கள். பொறியாளர் திரு N.P.K.வெங்கடேஷ் மூலம் இளையவர் ஜெயச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து மேட்டூர் சென்று அவருடன் உரையாடிய போது காங்கிரஸ் தியாகி திரு கே.வி. அய்யண்ண கவுண்டர் குறித்தும் இன்னும் பல தகவல்களையும் அறிந்து பதிவு செய்ய முடிந்தது.
தியாகி அய்யண்ண கவுண்டருக்கு நான்கு மகன்கள். அதில் கடைசி மகன் ஜெயச்சந்திரன். அவர், “எனது அண்ணன் தனபாலன் அவர்கள் ராணுவ வீரர். விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று சேலத்தில் வசிக்கிறார். அவர் ஓர் எழுத்தாளரும் கூட. புத்தகங்களை எழுதியுள்ளார்” என்று வழிகாட்ட, சேலத்தில் வசித்து வந்த தனபாலன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனபாலன் அவர்களுக்கு தற்போது 85 வயது. மேட்டூர் அணையைப் பற்றி கேட்டவுடன் சற்றே முதலில் உணர்ச்சிவயப்பட்டார். அவருடன் கூடிய உரையாடல் ஆற்றொழுக்கான பல விஷயங்களை தொட்டுச் சென்றது.
“நான் மேட்டூரில் கால் வைக்கும் போதெல்லாம் என் உடலில் ஓர் மின் அதிர்வு ஏற்படுவது போல் உணர்கிறேன். எங்கள் தாத்தா, எங்கள் சொந்த கிராமம் காட்டூரில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார். காட்டூர், சாம்பள்ளி கிராமம் அருகில் காவிரி கரையோரம் இருந்தது. அங்கே அவருக்கு சுமார் 30 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் மட்டுமே அப்போது தொழில். அணை கட்டினால் என்ன? நம் நிலத்துக்கு என்ன பிரச்னை வந்துவிடும்? என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் எங்கள் வீட்டு வாசல் வரை அணை நீர் தேங்க ஆரம்பித்தவுடன் இனி இங்கே வாழ முடியாது என்று உணர்ந்து கொண்டார். வீட்டின் முன் கற்பூரம் கொளுத்தி கும்பிட்டு விட்டு குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொண்டு அன்றே வெளியேறினார். அவரது குடும்பம் பெரியது. அவர் பெயர் ‘வானதுரை கவுண்டர்’. அவருடைய நான்கு மகன்களில் மூத்தவர் “கே.வி.அய்யண்ண கவுண்டர்”. அவர்தான் எனது தந்தை. நிலங்களுக்கு ஈட்டுத்தொகையாக கிடைத்த வெள்ளிப் பணத்தை பெற்று எங்கள் பாட்டனார் தனது மகன் அய்யண்ணனிடம் கொடுத்துவிட்டு விவசாயம் செய்ய வழி இல்லாத காரணத்தால் அமைதியாக காலம் கழித்தார்”.

“ஈடாக கிடைத்த வெள்ளிப்பணம் உண்மையில் ஒரு பரிசு போல கை நிறைய கிடைத்தது. அங்குள்ள கிராம மக்கள் பெரும்பாலானோர், அணைச்சுவருக்கு தெற்கே பவானி வரையிலும் குடிபெயர்ந்து தங்க பயந்தார்கள். காரணம், அணை ஒருவேளை உடைந்து விட்டால், நீரில் மூழ்கி நமது உயிர் போய்விடுமே என்ற மூடநம்பிக்கையில் அச்சப்பட்டார்கள். ஆனால், எங்கள் தந்தை அய்யண்ணன் தெளிவாகப் புரிந்து கொண்டு வந்த பணத்தில் மேட்டூர் கிராமத்தில் முதலில் தங்க வீடு, மற்றும் பல இடங்களை வாங்கிப் போட்டார். வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் தொழிலை மேற்கொண்டார். அவருக்கு மொத்தம் நான்கு மகன்கள் அதில் மூன்றாமவன் நான்”.
“காவிரி படுகை முழுவதும் வளமான பூமி. இழந்த எங்கள் நிலங்களை குறித்து எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு. ஆனால் மேட்டூர் கிராமத்தில் நாங்கள் வாழ்ந்த போது அணை கட்டுமான வேலைகளுக்கு வந்த கான்ட்ராக்டர்கள் மற்றும் இன்னும் பல பேர் அணை உடைந்து விடும் என்ற அச்சத்தினால் சொற்ப தொகைக்கு வீடுகளை, இடங்களை விற்றுவிட்டு செல்ல முற்பட்டபோது எங்கள் தந்தை தன்னம்பிக்கையுடன், துணிவுடன் அவற்றை எல்லாம் விலைக்கு வாங்கினார். அப்போது மேட்டூரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அவர் வசம் இருந்தது”.
“மேட்டூரில் சிறப்பான வகையில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாட்டிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. “சர்க்கார் தோட்டம்” என்று அழைக்கப்படும் அந்த அமைப்புகளுக்கு அருகில் எங்கள் தந்தை சுமார் 15 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து அதில் விவசாயம் செய்தார். தேவைக்கு அதிகமாக அங்கே கிடைத்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு வாழை, நெல் மற்றும் கரும்பு பயிரிட, விளைச்சல் அமோகமாக கிடைத்தது. அப்போது அவரிடம் பணம் நிறைய இருந்தது. மேலும், பெரிய குடும்பம். செலவு அனைத்தையும் அவரே கவனித்துக் கொண்டார்”.
“அந்த காலத்தில் நீராவி மூலம் இயக்கப்படும் பஸ் போக்குவரத்து இயங்கியது. ‘ஸ்வர்ணாம்பிகை பஸ் சர்வீஸ்’ போன்ற நிறுவன முதலாளிகள் ரத்தினம் பிள்ளை, மதுர பிள்ளை போன்றவர்கள் பேருந்துகளை நிறுத்தி வைக்க வாடகைக்கு இடம் கேட்டார்கள். அப்பாவிடம் ஊருக்குள் நிறைய இடம் இருந்ததால் பேருந்துகளை நிறுத்த இடங்களை வாடகைக்கு விட்டு சம்பாதித்தார். நீங்களும் இதே போல் ‘பஸ் ரூட்’ பர்மிஷன் வாங்கி ஓட்டலாமே என்று சில நண்பர்களின் யோசனையை ஏற்று மேட்டூர் - அந்தியூர் பஸ் ரூட் லைசென்ஸ் வாங்கி சொந்தமாக பஸ் நிறுவனம் நடத்தினார். ‘டென்ட் கொட்டாய்’ என்னும் சினிமா திரையரங்கம் லீசுக்கு எடுத்து ஓட்டினார். முதன்முதலாக நான் தியாகராஜ பாகவதர் நடித்த படத்தை எங்கள் ‘கொட்டாயில்’ தான் பார்த்தேன். எனக்கு அப்போது சிறிய வயது. அப்போது என் தாயார் இறந்து விட்ட சமயம்”.
“எனது சிறு வயதில் மேட்டூர் அடுத்துள்ள பல இடங்களை சுற்றி சுற்றி வந்தேன். ‘தேங்கல்வாரை’ என்று ஓரிடம். காவிரி ஆற்று நீர் அங்கே தேங்கி பின் ஓடும் புவியியல் அமைப்பு கொண்டது. அதற்கு அருகே மலைப்பாங்கான பகுதி உள்ளது. அந்த இடத்தில் திப்பு சுல்தான் கட்டிய கோட்டை என்பார்கள். அங்கெல்லாம் போய் சுற்றி இருக்கிறேன். ஆனால், இப்போது அந்த இடம் முழுவதும் சிதிலமடைந்து விட்டது. நீரிலும் மூழ்கியுள்ளது”.
“எங்கள் வீடு மேட்டூர் நகரிய குழு அலுவலகம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே இருந்தது. அங்கே ஒரு பெட்ரோல் பங்க் அப்போது இருந்தது. இப்போதும் இருக்கிறது. மேட்டூர் நகரிய குழு இருக்கும் இடம் பிரிட்டிஷார் காலத்தில் கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது”.
“பிறகு, அப்பாவுக்கு மகாத்மா காந்தி மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. காங்கிரசில் சேர்ந்தார். அதன் மூலம் காமராஜர், தொழில் அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது”.
“இளம் வயதில் கட்டுப்பாடு இல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். சீதா மலையின் மீது கட்டப்பட்ட ‘கவர்னர் சீட்’ என்ற அணை நினைவிடத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பேன். அந்த இடங்களுக்கு செல்ல பாதுகாப்பு கருதி இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது”.
“அதன் பிறகு நான் விமானப்படையில் சேர ஆர்வம் கொண்டு முயற்சித்து அதில் சேர்ந்தேன். 1978 வரை இந்திய விமானப்படையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று சேலத்தில் குடியமர்ந்தேன். முன்னதாக குவாலியர், டெல்லி, கௌஹாத்தி, கல்கத்தா, சிம்லா போன்ற இடங்களில் எல்லாம் பணிபுரிந்துள்ளேன். ராணுவத்தில் உள்ள போது B.A., எகனாமிக்ஸ் படித்து தகுதி பெற்றேன். இன்றளவும் அது எனக்கு துணை புரிகிறது” என்று தன் வரலாறை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டார்.
மேட்டூர் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் அவர் முகத்தில் சந்தோஷ மின்னல்! மேட்டூர் அணை கட்டுமானம் குறித்த பல தகவல்களை அறிந்து வைத்துள்ளார் தனபாலன். காலப்போக்கில் பகுத்தறிவு சிந்தனை ஏற்பட்டு பெரியார் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். மூட நம்பிக்கைகள் பலவாறாக சமூகத்தில் பரவி இருக்கிறது. இவை ஒழிக்கப்பட வேண்டும் என்று சில கருத்துக்களை எழுதி டைப் செய்து தனது அறையிலும் கூட சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். தெளிவான சிந்தனையோடு பேசும் இவரது உரையாடல்கள் இவரது அனுபவ அறிவை பறைசாற்றுகிறது.
தனது மனைவியை இழந்த இவர் தனது மகன் மற்றும் அவர் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வருகிறார். இசைப் பிரியர். தன் வீட்டு மாடியில் உள்ள தனது தனி அறையில் எலக்ட்ரானிக் கீ போர்டு வைத்து அதில் இசை அமைக்கிறார். பலவித டியூன்கள், குறிப்பாக பழைய சினிமா பாடல்களை அநாயசமாக முழுவதும் வாசிப்பதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தேன். தான் இறந்தாலும் யாரும் அழத் தேவையில்லை, எந்த சம்பிரதாய சடங்குகளும் செய்யக் கூடாது, எதை செய்ய வேண்டும் என்பதைக்கூட தெளிவாக எழுதி தனது அறையில் ஒட்டி வைத்துள்ள இவரைப் போன்ற பகுத்தறிவுவாதியைச் சந்திப்பது அபூர்வம்.
தனது அனுபவங்களை “ஒரு பகுத்தறிவாளனின் நினைவலைகள்” மற்றும் “அந்த15 ஆண்டுகள். விமானப்படையில் 1963 – 1978” என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இரண்டாவது புத்தக வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகர் “டெல்லி கணேஷ்” கலந்து கொண்டு வெளியிட்டார். அப்போது அந்த விழாவுக்கு அடியேனும் சேலம் சென்று இருந்தேன். நடிகர் டெல்லி கணேஷும், தனபாலும் விமானப்படையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். தனது சொந்த அனுபவங்களை குறித்து எழுதிய இந்த இரண்டு நூல்களும் வாசிக்க சுவாரஸ்யமானவை. தீவிர புத்தக வாசிப்பாளர் இவர்.
அணை கட்டும் காலத்திலிருந்து மேட்டூரில் வசித்த காண்ட்ராக்டர்கள் கருப்பண்ண பிள்ளை, ஆசீர்வாதம் பிள்ளை, குருசாமி கவுண்டர், நவாப் ஜான், செங்கோட கவுண்டர், சேவி கவுண்டர், மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா செம்பா கவுண்டர் போன்ற பல முக்கிய பிரமுகர்களிடம் இவருக்கு நல்ல அறிமுகம் இருந்திருக்கிறது. சிலருக்கு உறவுக்காரராகவும் இருந்துள்ளார்.
மனைவியை இழந்த துக்கம் இருந்தாலும், அதை கடந்து, தனக்கு பிடித்த வாழ்க்கையை ராணுவ கட்டுப்பாடு வளர்த்த வகையில் மகிழ்ச்சியாக கழிக்கிறார். தனக்கு பிடித்த இசையமைப்பு, வாசிப்பு, உடலை பேணுதல், சமச்சீர் உணவு போன்ற விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருவதை காணும் போது காவிரி கரையோரம் வாழ்ந்த முன்னோர்களின் வாரிசுகள் இப்படி ஒழுங்கு முறையில்தான் வாழ்வார்கள்போல என்று எண்ணும் அளவுக்கு இந்த மண்ணின் மீது மேலும் மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.
கொள்கை வழி நின்று வாழ்வது வாழ்க்கையை செம்மைப்படுத்தும். நட்பை வளர்க்கும் பண்பாடு, சமரசம் இல்லாத வாழ்க்கை போன்ற பண்புகள் நிறைந்த இவர், முன்னோர்கள் வழி வந்த மானுட உழவர். இவரது எழுத்துக்களை வாசிக்கும் போது மற்றவர்களின் மனதில் நல் விதைகளை விதைக்கும் காவிரிக் கரையோர விவசாயி என்றுதான் கூறத் தோன்றுகிறது.
இவர் போன்ற நல்விதைகள் விதைக்கப்பட்டு, பலரின் மனதில் நல்ல பண்பாடுகள் வளர்ந்து “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறும் நல்ல சமுதாயம் எனும் மழைக்காடுகள் உருவாகட்டும்.
மார்ட்டள்ளிக்கு அருகில் ‘ஒட்டர் தொட்டி’ என்ற கிராமம். ஒட்டர்கள் என்பவர்கள் பெரிய பாறாங்கற்களை சுத்தியல் கொண்டு சிறிய கற்களாக உடைத்து தரும் கடின வேலை செய்பவர்கள். சில சமயம் சிறிய மலை குன்றுகளை கூட தரைமட்டமாக்குவதில் வல்லவர்கள். அந்த கிராமத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல இடங்களுக்கு இத்தொழில் செய்பவர்கள் ஒரு சமயம் சென்றார்கள். அதனால் அந்த இடத்திற்கு ‘ஒட்டர் தொட்டி’ என்று பெயர் வந்ததாக கூறினார்கள்.

அங்கு T.அந்தோணியப்பன் என்ற பெரியவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் தற்போதைய வயது 89. “என்னோட அப்பா அம்மாவின் திருமணம் காவிரி கரையோர ஞாயம் பாடி கிராமத்தில்தான் நடந்தது. எனது சிறுவயதில் பெரியவங்க எங்களை கூட்டிக்கொண்டு இங்கே வந்து தங்கிட்டாங்க. சுமார் 25 வருடம் முன்பு எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த ‘லூர்து மாதா’ கோயிலை’ பார்க்கலாம்னு நண்பர்கள், இரண்டு (ஃபாதர்கள்) பங்குத் தந்தையர்களுடன் சென்றேன். அப்போது காவிரியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. மாதா கோயிலின் ஒரு கோபுரம் அப்படியே இருந்தது. ஆனால் மற்றொரு கோபுரம் உடைந்து போயிருந்தது. எப்படி உடைந்தது என்று விசாரித்து தெரிந்து கொண்டோம். சிலர் மீன் பிடிக்க வெடி வைத்து வீச அந்த இடத்தின் அதிர்வில் ஒரு கோபுரம் சிதிலமடைந்து விட்டதாக கூறினார்கள்.
என் பெற்றோரும் பல பெரியவர்களும் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1924 இல் பேய் மழை பிடித்து ‘பேயாற்றில்’ (காவிரியில்) தண்ணீர் வந்த போது ஆற்றில் கரைக்கும் படுகைக்குமான ஆழம் 15 அடிக்கு மேல் இருக்கும். அந்தப் பள்ளம் முழுவதும் நீர் நிறைந்து கோயிலுக்குள் நீர் வந்து விட்டதாம்.
நாங்கள் அங்கு போன போது கோயில், கோபுரங்களின் அளவுகளை டேப் வைத்து அளந்து நோட்டுப் புத்தகத்தில் குறிப்பு எழுதிக் கொண்டு வந்தோம். அந்தக் கோயிலைப் போலவே மார்ட்டள்ளியில் மாதா கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த சொரூபங்களை (சிலைகள்) வண்டி வைத்து இங்கே கொண்டு வந்தார்கள். அந்த சிலைகள்தான் இப்போது இங்கு கோயிலில் உள்ளன.
1924 இல் ஞாயம்பாடியில் 35 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கூட ஹரிஜன்கள் 20 குடும்பங்கள் இருந்தார்கள். ஊருக்கு தெற்கே ‘அம்மையப்பன் கொட்டாய்’ என்றழைக்கப்பட்ட இந்து கோயில் இருந்தது. கோயில் வாசலில் இருந்து 15-20 அடி ஆழம் கீழே படிகள் இருக்கும். இறங்கிச் செல்ல வேண்டும். காவிரி ஆறு ஓடும் இடத்துக்கு இறங்கி குடத்தில் தண்ணீர் எடுத்து மேலேறி வருவார்கள். கோவில் ஓரமாக 35 குடும்பங்களும் வசிச்சாங்க. தண்ணீர் எடுக்க போகும் போது ஞாயம்பாடி பொம்பளைங்களும் பக்கத்தில் இருந்த கோட்டையூர் பொம்பளைங்களும் சேர்ந்து கரையோரமா கும்மி அடிப்பாங்க. அது அப்போ ஒரு பழக்கம் இருந்துச்சு!
அதற்கு முன்பு ‘கர’ வருஷம் பஞ்சம் வந்தபோது கிடைத்த ஒரே உணவு இருளைக்கிழங்கு. அதை சுட்டு சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். பஞ்சத்தின் போது அது ஒன்று மட்டும் தான் உணவு” என்றெல்லாம் மள மள வென்று பேசி தன் நினைவுகளையும், பழைய சங்கதிகளையும் ஒரே மூச்சில் கூறி முடித்தார்.
``முன்னதாக, 1928-ல் கால்ராயன் குடும்பம், கவுண்ட ஊட்டுக்காரர் குடும்பம், மிலிட்டரி காரர் குடும்பம்னு சில பல குடும்பங்கள் ஒரே சமயத்தில் இங்க வந்து செட்டில் ஆனோம். கெடச்ச ஈட்டு பண வெள்ளியை வச்சு இந்த நிலத்தை வாங்கி வெள்ளாமை செஞ்சாங்க. பலர் வேலைக்கும் போறாங்க” என்று தெளிவான கணீர் குரலில் இன்னமும் பேசுகிறார்.
அப்பவெல்லாம் வேளாண்மை மட்டுமே தொழில்.
ஏழை ஏழையாகவே இருந்தான். பணக்காரன் மேலே மேலே இன்னமும் பணக்காரனா ஆயிட்டே இருந்தான். அவ்வளவுதான் வாழ்க்கை.
“காடு புடிக்கிறது” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தியதால், அப்படின்னா என்னங்க பெரியவரே? என்று கேட்டேன். “அப்போது ஆலங்காடாக இருந்த இடத்தை மக்கள் அரிவாளால் வெட்டி சுத்தம் செய்து, பண்படுத்தி, உழுது அதில் விவசாயம் செய்து தாங்கள் எந்த அளவுக்கு விவசாயம் செய்கிறார்களோ அந்த இடத்துக்கு D.R.பட்டா மற்றும் LND பட்டா என்று வாங்கி சொந்தமாக்கி கொண்டார்கள். அப்போதைய பிரிட்டிஷ் அரசு அப்படி கொடுத்தது. இந்த வழிமுறைக்கு பெயர் ‘காடுபிடிக்கிறது’ என்று விளக்கினார்.
அந்த கால கிராம வாழ்க்கை அதுவும் ஆற்றங்கரையோர வாழ்க்கையில் நிம்மதி இருந்திருக்கிறது.
கொள்ளேகால் மாவட்டத்தில் உள்ள காராய்ச்சி கட்டை என்ற கிராமம் ‘சாந்தி நகர்’ பகுதியில் உள்ளது. மிகவும் உள்ளடங்கிய கிராமத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார் நண்பர் செல்வம். அங்கு திரு.அந்தோணிசாமி என்பவரை சந்தித்தேன். தனது கடும் உழைப்பால் காடாகவும், மலைப்பாங்கான கற்கள் நிறைந்திருந்த பகுதியாகவும் இருந்ததை உழுது சீராக்கி தன் குடும்பத்தாருடன் விவசாயம் செய்து வந்த கடும் உழைப்பாளியான அந்த உழவரை சந்தித்தோம்.

நன்கு உரம் ஏறிய உடல். உழைப்பதற்கு அஞ்சாதவர். தனது பாட்டனார் பெயர் சுப்பராய கவுண்டர் என்று பேச ஆரம்பித்தார்.
“எங்க கிழவன் காவிரி கரையோர ஞாயம் பாடி கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். பிரிட்டிஷ்காரங்க காவிரியில் டேம் கட்றாங்க. உங்க நிலத்துக்கு நஷ்ட ஈடு தர்றோம். நிலங்களை கொடுத்திடுங்கன்னு கவர்மெண்ட் அதிகாரிங்க வந்து கேட்டாங்களாம். எங்க கிழவனுக்கு ( அப்பாவின் அப்பா ) முன்கோபம் ரொம்ப அதிகம். எங்க அப்பா சொன்னாரு இதை எல்லாம்!
கிழவன் அந்த அதிகாரிங்க கிட்ட நீங்க என்ன நஷ்ட ஈடு தர்றது? என் நிலத்துக்கு நீங்க காசு தருவீங்களா? நான் காசு வாங்கணுமா? போங்கப்பா, பேச வந்துட்டீங்க!” என்று மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி இருக்கார். டேம் கட்ட நிறைய ஆள் தேவைப்படுது. நீங்க நெலத்தை கொடுத்துட்டு டேம் கட்ற வேலைக்கு வந்துருங்க, நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க.
அடப் போங்கப்பா, உங்க வேலையும் நீங்களும். நான் மண்ணுல இறங்கி உழவோட்ற விவசாயி. நான் வேற ஆள் கிட்ட போய் வேலை பார்த்து சம்பளம் வாங்கணுமான்னு கோபமா பேசிட்டு, குடும்ப ஆளுங்களை கூப்பிட்டுகிட்டு, கொளத்தூருக்கு தெக்க இருக்கிற ‘பூமனூர்’ கிட்ட ‘மாமரத்து காடு’ என்ற இடத்துக்கு பக்கம் சுமார் 5 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார். அப்போ அவர் கையில சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் இருந்தது.
அவர் காலத்துக்கு பின்னாடி எங்க அப்பா, அப்புறமா நானும் என் தம்பியும் இருக்கும் நிலத்தை ரெண்டா பிரிச்சு என் பங்கை வித்துட்டு பூமனூரில் இருந்து இங்கே ‘காராய்ச்சி கட்டையிலே’ வந்து செட்டில் ஆனேன். எங்க அப்பா பேரு சவரியப்பன். ஞாயம் பாடியில் இருக்கும் போதே எங்க குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிட்டோம். எங்க கிழவனார் பிழைக்கத் தெரியாமல் அப்படி வந்துட்டாரா இல்ல, அவர் கோபம் அப்படி நஷ்டப்பட வச்சுதானு எனக்கு சொல்ல தெரியல. ஆனா, ரோஷக்காரரு…அவருக்கு தெளிவில்லை! அதை மட்டும் சொல்லுவேன்.
நான் இங்கே வந்து ஒரு பட்டை (ஒரு சதுரம் என்கிறார்கள்) ரூபாய் 13 ஆயிரத்துக்கு வாங்கி என் உழைப்புல இந்த இடத்தை விவசாய பூமியா மாத்தினேன். பாருங்க, எல்லாம் வெளஞ்சி நிக்குற பூமியா ஆச்சு!
முதல்ல இது ஆலங்காடா தான் இருந்துச்சு. ஆனா கெரகம் கடும் உழைப்பு தான் இதுக்கு கொடுத்தேன். பரவால்ல, இப்படி வெளையர பூமியா மாத்திபுட்டோம். எங்க கிழவனோட அளவு மீறிய கோவம் நம்ம குடும்பத்தை நஷ்டத்துல தள்ளிருச்சின்னு எங்க அப்பா அவர் இருக்கும் போது என்னிடம் வருத்தப்பட்டு சொல்லிட்டே இருப்பார்.
பல வருஷத்துக்கு முன்னாலேயே இங்க இருக்கிற மக்கள் நம்ம தமிழ் மக்களை பாராட்டிக்கிட்டே தான் இருந்தாங்க. தமிழ்நாட்டில் இருந்து வர்றவங்க உழைக்க தயாரா இருக்காங்க. நாம டீக்கடையில் பஜ்ஜி டீ சாப்பிட்டுட்டு அவங்க வேலை செய்றதை பார்த்துகிட்டு இருக்கோம். நம்ம ஆளுங்க சுகமா இருக்கத்தான் தயாரா இருக்காங்க என்று டீக்கடையில் கன்னட மக்கள் பேசுவதை அடிக்கடி கேட்டு இருக்கேன். இங்கே உள்ளது பொறம்போக்கு நிலம்னாலும் அப்புறமா ஒரு ஆளுக்கு மூணு ஏக்கர்னு பட்டா போட்டு கொடுத்தாங்க. மேட்டூர் டேம் கட்றத்துக்கு முன்னாடியே 1924 இல் ஆறு, பேயாட்டம் ஓடிச்சு! அப்போ பேயாறுனு தான் மக்கள் சொன்னாங்க. தொத்து வியாதி வந்து பல பேர் செத்துப் போனதா அப்பா சொல்லி இருக்காரு.
அங்கிருந்து இங்க பஞ்சம் பொழைக்க வந்த குடும்பம்னாலும் இதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அது எங்க கிழவனார் காலம். இப்போ காலம் மாறிடுச்சி. இப்போ எங்களுக்கு எப்படி பிழைக்கலாம்னு மட்டும் தான் சிந்தனை. நல்லது கெட்டதுன்னா கொளத்தூர் வருவேன். எங்க அப்பா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் - ஞாயம் பாடியிலே பொட்டுக்கம்பு, ஆரியம், திணை இதெல்லாம் நல்ல வெளையுமாம். சாப்பாட்டுல தினமும் மீன் இல்லாம இல்ல! அங்க மூனு வேளையும் மீனுண்டு! அங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்தோம்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
எங்க நிலமெல்லாம் தண்ணிக்குள்ளே இருக்கு இப்போ. அதுக்கு காசு வாங்காம வீம்பிலே வந்த குடும்பம் எங்களது என்று கூறினாலும் அந்தோணி சாமியின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மலர்கிறது. தனது ஒரு மகளை நர்சிங் டிப்ளமோ படிக்க வைத்திருக்கிறார். ஒரு மகன் உதவிக்கு இருக்கிறார். பேசிக் கொண்டிருந்த நேரம் அப்போது மதியம் ரெண்டு மணி.
“என்னங்க சாப்பிடற நேரம் ஆச்சு! இருங்க, சாப்பாடு பொங்கச் சொல்றேன் என்று தன் மனைவியை அழைத்தார். சாப்பிடலாம் என்று தவறாமல் அழைக்கும் தமிழருக்கே உண்டான விருந்தோம்பலை அன்று நேரில் பார்த்தோம். அவரிடம் நேரம் ஆகிவிட்டது என்று அன்பாக மறுத்து அவரது குடும்பத்தை வாழ்த்திவிட்டு மார்ட்டள்ளி திரும்பினோம். நல்ல மனிதர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் அந்த இடத்தை நல்ல இடமாகவும் மாற்றி விடுகிறார்கள்.
தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு
அந்த நாளில் அறம் செய்தவர்கள் அவ்வறம் என்றும் நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் “கல்லும் காவிரியும் புல்லும் பூமியும் உள்ளவரை” இந்த அறம் நிலவ வேண்டும் என்று கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்து வைத்தனர்.




















