சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருட்டு; பணிப்பெண்கள் கை...
தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்: சுகப்பிரசவம் அருளும் அம்பிகை!
கும்ப கோணம்-தஞ்சாவூர் முக்கிய சாலையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது சக்கராயி கோயில்.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இங்கு வழிபட்டால் கர்ப்பிணிகளுக்குச் சுகப்பிரசவம் நிகழுமாம். வாருங்கள் இந்த அற்புதமான அம்மன் ஆலயத்தின் தலவரலாற்றைப் பார்ப்போம்.
12-ம் நூற்றாண்டில் 2-ம் ராஜராஜர் ஆட்சிக்காலத்தில் ஒட்டக் கூத்தரால் அதிவீர்யமான ஆறு சக்கரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதற்கு மேல் இத்தல அம்மனை பிரதிஷ்டை செய்தார்கள் என்கிறது தலபானம்.
திருமணம், பிள்ளைப்பேறு, உதிரப்போக்கு நிவர்த்தி, உடற்பலம், மனோபலம் ஆகிய ஐந்தினையும் பெண்ணுக்கு அருளுவதற்காக ஐந்து யந்திரங்களாம். ஆறாவது யந்திரம் சற்று விசேஷமானது.

பிரசவத்தினாலோ அல்லது துர்மரணமாகவோ இறப்பு நிகழாமல், வாழ்க்கையை நல்லபடியாய் அனுபவித்து நீண்டகாலம் வாழும்படியான அமைப்பைத் தரும் விதம் - அபகால மிருத்யு பயம் ஏற்படாதிருப்பதற்காக அருள்வது ஆறாவது சக்கரம் பிரதிஷ்டை ஆனதாம்.
கர்ப்பிணிகளின் அச்சத்தினைப் போக்கிடும் இந்த அன்னையின் தரிசனம். சந்நிதிக்குக் காவலாக வலதுபுறத்தில் பச்சைக்காளியும், இடதுபுறத்தில் பவழக் காளியும் நிற்கிறார்கள்.
மல்லாந்த நிலையில் பிரசவத்திற்குத் தயாராக உள்ள பெண்தான் கருவறைத் தெய்வம். சற்றேறக்குறைய இரண்டரை அடி உயரமும் நான்கரை அடி நீளமும் உடைய கற் பலகையில் புடைப்புரு போன்று அமைந்துள்ள கல் திருமேனி அம்மனுடையது.
தலையற்ற உடலுடன் இரண்டு கரங்களும் தோளுக்கு மேலே உயர்த்திய நிலை. நேரடியாகத் தரிசிக்க இயலாதபடி சுற்றிலும் புடவை திரை அலங்காரத்தால் மறைத்திருக்கிறார்கள். திரைக்கு மேல் ஆபரணங்களும் பூச்சரங்களும் சார்த்திய நிலையில் நாம் தரிசிக்கலாம்.
அபிஷேகாதிகளையும் முழு வஸ்திரத்தினைச் சுற்றப்பட்ட நிலையில்தான் செய்கிறார்கள். கீழே அத்தி மரத்தினால் ஆன சிரசு ஒன்று உள்ளது. அதற்கும் விசேஷ அர்ச்சனைகள் நிகழ்கின்றன.
இந்தக் கோயிலில் வைகாசி மாதம் அமாவாசை அன்று காப்பு கட்டி பத்து நாள்கள் உற்சவம் நிகழ்த்தப்படுகிறது. அந்தத் தருணத்தில் மட்டுமே, அந்த சிரசினை மூலத்திருவிற்கு கழுத்தில் வைத்து அலங்கரித்த நிலையில் சக்கராயி காட்சி தருவாளாம். ஏனைய நாட்களில் சிரசு இல்லாமல் இருப்பதால் எவரும் காண இயலாதபடி மறைத்தே வைத்து இருக்கிறார்கள்.

வைகாசி உற்சவத்தின்போது இந்தச் சக்கராயி அம்மனுடன், அருகிலுள்ள கோயில்களிலிருந்து தாராளம்மன், பொன்னியம்மன், மோக்ஷாளம்மன் ஆகிய மூன்று பெண் தெய்வங்கள் உலா வருவதும் வெகு விமரிசையாக நிகழும் என்கிறார்கள்.
கோயிலின் மகா மண்டபத்தில் இருபுறங்களிலும் ஐயனார், விநாயகர், நாகர், வீரன், பைரவர் ஆகியோரை நிலைப்படுத்தி இருக்கிறார்கள். அருகே கல்லால் ஆன பாதப் படிமம் ஒன்று உள்ளது. சிரத்தினைக் கொய்த கிருஷ்ணரின் திருப்பாதங்களாம் அவை.
மேலும் இந்தக் கோயிலில் மூன்று முகங்கள் உடைய மகாலட்சுமி, தவ்வை ஆகியோருடன் மாரியம்மன் திருவும் உள்ளது. கர்ப்பிணிகளுக்கு மருத்துவச்சியாக வந்து காப்பவள் என்பதால் `மருத்துவ மாரி' என்பது திருப்பெயர்.
சக்கராயிக்குக் காவலாக உள்ள வீரன், சக்கராயி கோயிலுக்கு வெளியே வலப்புறத்தில் தம் சக்தியரோடு நிலைத்துள்ளார். இவருக்கு மட்டும் திருவிழா நேரத்தில் விசேஷ படையல் உண்டு. அத்தகு அசைவப் படையல் நிகழும் நேரத்தில், கோயில் மூலஸ்தானத்துக் கதவுகளை மூடி நடைசாற்றி விடுவது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்திற்கு `சக்கராயி குளம்' என்று பெயர். தேவியின் அறுபட்ட சிரம் இக்குளத்தில்தான் வீழ்ந்துள்ளது என்பது நம்பிக்கை.

திருமணம் ஆன பெண்களும், கர்ப்பிணிகளும் கோயில் வளாகத்திலுள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
பெரும்பாலும் கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்திற்காக வளையல் கட்டி வேண்டுதல் செய்வதுதான் இங்கு அதிகம். இவ்வாறு பிரார்த்தனை செய்பவருக்கு கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ ஏற்படுவது கிடையாது என்பது உறுதி.
அம்மனின் அருளால் பிரசவம் நல்லபடியே நடந்து குழந்தை பிறந்தபிறகு, குழந்தையுடன் வந்து இவள் சந்நிதியில் குழந்தையைக் கிடத்தி நேர்த்திக் கடனைத் ஆற்றுவது அவசியம்.
அதேபோல் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து, புது சிவப்புப் புடவை மற்றும் பூச்சரங்களுடன், எலுமிச்சை மாலை சாற்றி, சிவப்பு அரளிப்பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது.
சக்கராயி அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கலைப் படைத்து விநியோகம் செய்தால், சக்கராயி மனங்குளிர்ந்து மகவினை ஆசிர்வதிப்பாள் என்கிறார்கள். தவிர கருப்பைக் கோளாறு கள்,சூதகக் கட்டிகள், மெனோபாஸ் போன்ற பாதிப்புகளால் அவதிப் படுபவர்களும் இவ்வன்னைக்கு குங்குமார்ச்சனை செய்து வழிபட, கைமேல் பலன் கிடைப்பது கண்கூடு.





















