மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்...
மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" - கனிமொழி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன.

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














