செய்திகள் :

இங்கு நேத்ர விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கை ஒளிரும்! - சுக்ர பகவான் கொடுத்த வாக்குறுதி

post image

தீபாவளி என்றதுமே ஒளி சிந்தும் தீபங்கள்தானே நம் நினைவுக்கு வரும்... அந்த வகையில் இந்த தீபாவளியை ஒட்டி நாமும் தீபத்துடன் தொடர்புடைய வைணவ க்ஷேத்திரம் ஒன்றின் சிறப்பை அறிவோம். சுக்ர பகவானே சரவிளக்காகத் திகழும் அபூர்வத் தலம் அது.

வாழ்வில் சுக்ர யோகத்தை விரும்பாதவர் யார்... இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சுக்ரனின் அருளையும், சகல செல்வங் களுக்கும் செளபாக்கியங்களுக்கும் உரியவளான மகாலட்சுமியின் அருளையும், மகாவிஷ்ணுவின் பேரருளையும் ஒருங்கே பெற்று மகிழலாம்.

இத்தகைய சிறப்புமிக்க தலம் எது என்கிறீர்களா... திருவெள்ளியங்குடி திருத்தலம்தான்அது.

கும்பகோணம் - சோழபுரம் மார்க்கத்தில், அணைக்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவெள்ளியங்குடி.

சரி, இங்கே சுக்ரபகவான் சரவிளக்காய் திகழ்வது ஏன்... அதற்குக் காரணமாகச் சிலிர்ப்பூட்டும் திருக்கதை ஒன்று உண்டு.

பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான மகாபலி சக்ரவர்த்தி மிகச்சிறந்த பக்தன். மக்கள் பெரிதும் விரும்பிய அரசன். மகாபலியின் நல்லாட்சியும் புகழும் இந்திரலோகம்வரை சென்றது. அதேபோல், மகாபலி செய்த தவமும் தானமும் இந்திரப் பதவியையே ஆட்டம் காணச் செய்யும் வகையில் அமைந்தனவாம்.

ஒரு நிலையில், இதன் பொருட்டு மகாபலிக்குள்ளும் சற்று ஆணவம் எழுந்ததும், அந்த ஆணவத்துக்குத் தூபமிட்டார் அசுர குருவான சுக்ராச்சார்யர். அதேநேரம் மகாபலி அடைந்த புகழைக் கண்டு இந்திரன் அச்சம்கொண்டான். அவனுடைய தாயான அதிதி திருமாலைச் சரணடைந்து, தேவர்களைக் காக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். மகாபலியின் ஆணவத்தை அடக்க வேண்டினாள்.

பக்தனாய்த் திகழ்ந்து பேறுபெற்றவன், வீண் அகம்பாவத்தால் நிலை தாழ்ந்துவிடக் கூடாது என்று எண்ணினார் திருமால். ஆகவே, மகாபலியைத் திருத்துவதுடன், அவனைப் பாதாள லோகத்தில் இருக்க வைத்து, நித்ய ஜீவியாக வாழும்படிச் செய்ய திருவுளம்கொண்டார் திருமால். ஆகவே, பூலோகத்தில் அவதரிக்க முடிவெடுத்தார்.

அதன் விளைவாக, திருமாலின் 5-வது அவதாரம் நிகழ்ந்தது. காசிப முனிவர் - அதிதிதேவிக்கு மகனாக, வாமனராக வந்து அவதரித்தார் பெருமாள்.

புரட்டாசி மாதம், சுக்ல பட்சத்தில், திருவோண நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் தருணத்தில் வாமன அவதாரம் நிகழ்ந்தது. அதேவேளையில் அசுர குருவான சுக்ராச்சார்யருக்குச் சில கெட்ட சகுனங்கள் தோன்றினவாம். ஆகவே, அரசன் மகாபலியிடம் `விக்ரஜித்’ என்ற பெரிய வேள்வியை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அந்த வேள்வியை முடித்து விட்டால், அதன் பிறகு மகாபலியை எவராலும் வெல்ல முடியாது என்பது அசுரகுருவின் எண்ணம்.

வேள்வி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தானமளிப்பது, வேள்வியின் முக்கிய அம்சம். ஒருநாள் யாகசாலைக்கு வந்த வாமனர், மகாபலியிடம் மூன்றடி நிலம் தானம் கேட்டார். `வந்திருப்பவர் பரம்பொருளான திருமால்’ என்று அசுரகுரு எச்சரித்தார். பரம்பொருளே யாசகம் கேட்டு வந்திருப்பது தனது குலத்துக்கே பெருமை என்று எண்ணிய மகாபலி, குருவின் பேச்சை மீறி வாமன மூர்த்திக்கு தானமளித்தார்.

அதன் பொருட்டு அவன் கிண்டிச் சொம்பின் நீரை வார்த்து தானம் அளிக்க முற்பட்டபோது, வண்டு ரூபமெடுத்த சுக்ரர் கிண்டிச் சொம்பின் நீர் வெளியேறும் துவாரத்தை அடைத்துக்கொண்டார். அதன் மூலம் தானத்தைத் தடுக்கலாம் என்பது சுக்ரரின் எண்ணம். வாமனர் இதை அறிய மாட்டாரா என்ன... அவர், துவார அடைப்பை நீக்கும் பொருட்டு தர்ப்பைப் புல்லைக்கொண்டு குடைந்தார். அதனால் வண்டாக இருந்த சுக்ரரின் பார்வை பறிபோனது.

அதன் பிறகு, எவ்விதத் தடையுமின்றி தானம் வழங்கப்பட்டது. இரண்டடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்த பெருமாள், மகாபலி கேட்டுக்கொண்டபடி, மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்து அவனைப் பாதாளத்துக்கு அழுத்தினார் என்ற திருக்கதையை நாமறிவோம்.

பார்வையைப் பறிகொடுத்த சுக்ரர் வேதனையுற்றார். பரந்தாமனை தியானித்துத் தொழுதார். தனது பாவத்தை மன்னிக்கும்படி வேண்டினார். பரந்தாமனின் ஆலோ சனைப்படி பூலோகம் வந்து பல தலங் களுக்கும் சென்று வழிபட்டார். அந்த வகையில் அவர் வழிபட்ட சிவத்தலங் களெல்லாம் வெள்ளீஸ்வரங்கள், சுக்ரீஸ்வர தலங்கள் என்று பேறுபெற்றன. நிறைவில் சிவனாரின் வழிகாட்டுதல்படி சுக்ரன் வந்தடைந்த இடம்தான், இந்தத் திருவெள்ளியங்குடி.

கிருத யுகத்தில் பிரம்மபுத்திரம்; திரேதா யுகத்தில் பராசரம்; துவாபர யுகத்தில் சைந்திர நகரம் எனும் பெயர்களுடன் திகழ்ந்ததாம் திரு வெள்ளியங்குடி. இந்தத் தலத்தை `பார்கவ க்ஷேத்திரம்’ என்றும் புராணங்கள் போற்றுகின்றன. மார்க்கண்டேயர், சுக்ரர் ஆகியோருக்கு ராம அவதாரத்துக்கு முன்பாகவே ராமனின் திருவடிவைக் காட்டியருளிய தலம் இது என்பது கூடுதல் சிறப்பு.

இங்கே அந்து சிவபூஜையில் ஈடுபட்டார் சுக்ரர். அவரது பூஜையால் மகிழ்ந்த சிவனார், திருமாலை வேண்டி தவமியற்றும்படி வழிகாட்டினார். சுக்ரன் ஈசனை வழிபட்ட சிவாலயம், இந்தத் தலத்தில் கோலவில்லி ராமர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கிறது. அந்தக் கோயிலில் சுக்ரன் கண்ணிழந்த நிலையில் காணப்படுகிறாராம்.

பின்னர் ஈசனின் அறிவுரைப்படி திருமாலை தியானித்துத் தவமிருந்தார் சுக்ராச்சார்யர். அவரின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள், சுக்ரனுக்குக் கண்ணொளி கொடுத்தார். மட்டுமன்றி, தான் எடுக்கவிருந்த எல்லா அவதாரக் கோலங்களையும் காட்டியருளினாராம்.

அவற்றில், அனைவருக்கும் மகிழ்வைத் தரும் கல்யாண ராமனின் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த சுக்ரன், அந்தத் திருக்கோலத்தை மீண்டும் காண விரும்பினாராம். பெருமாளும் இசைந்தார்.

ராமபிரான் வடிவில் பாம்பணையில் பள்ளிகொண்டார். வலக் கரத்தால் தனது சிரசுக்கு அணை கொடுத்து, இடது கரத்தைத் தளர்த்தி, அறிதுயில் கொள்ளும் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். இந்த இடத்தில் ``இதே கோலத்தில் கோயில்கொண்டு, கலியுகம் முழுக்க ஆட்சி செய்ய வேண்டும்’’ என்ற சுக்ரனின் வேண்டுகோளை ஏற்று அங்கேயே கோயில்கொண்டார் கோலவில்லி ராமர்.

தன்னைக் கண்ட சுக்ரனின் கண்கள், இனி யாரை நோக்கினாலும் அவர்களின் வாழ்வு வளமாகும். செல்வமும் புகழும் பெருகி வளரும் என்று சுக்ரனுக்கு வரமும் அருளினார் கோலவில்லி ராமர். மேலும் வான மண்டலத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் சூரியனுக்கு முன்பு எழும் விடிவெள்ளியாக இருந்து, அதைக் காண்பவர்கள் வாழ்வில் நன்மைகளைத் தரும்படியும் சுக்ரனுக்கு அருள்செய்தார். சுக்ரன் வான மண்டலத்தில் ஒன்பது கிரகங்களில் ஒருவரானார்.

இப்படி அருள்செய்த பரம்பொருள் சுக்ரனைச் சோதிக்கவும் எண்ணியது. பக்தரிடம் விளையாட்டு என்றால் பரம்பொருளுக்கு வெல்லக்கட்டி உண்பதுபோல அல்லவா?!

`‘இத்தனையும் பெற்ற சுக்ரனே, பதிலுக்கு நீ எனக்கு என்ன கொடுக்கப்போகிறாய்?’’ என்று வினவினார்.

சுக்ரன் ஒருகணம் அதிர்ந்துபோனார். எல்லாம்வல்ல பெருமாளுக்குத் தன்னால் என்ன கொடுத்துவிட முடியும் என்று திகைத்தார். பின்னர் சுதாரித்துத் தெளிந்தவர் `பரம்பொருளுக்கு அளிக்கவேண்டியது பக்திதானே’ என்று தீர்மானித்தார். கண்ணீர் மல்க மறுமொழி கூறினார்.

``பெருமாளே! உங்கள் வரத்தின்படி நான் உலகுக்கு விடிவெள்ளியாக விளங்கினாலும், இந்தக் கோயிலில் ஒரு சரவிளக்காகத் தொங்குவேன். இங்கு வந்து உங்களைத் தொழும் அத்தனை பேரின் வாழ்விலும் ஒளி வழங்கும் திருவிளக்காக அது அமையும். பார்வை தொடர்பான குறைகள் நீங்கவும் சக்தி தரும். உங்களை வணங்கி, அந்த விளக்கை ஏற்றி வழிபடுவோருக்கு சுக்ர பலம் நல்கி, அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுவேன். உங்கள் பக்தர்களின் நலனுக்காக விளக்கின் அம்சமாய் இங்கு தவமியற்றியபடியே இருப்பேன்’’ என்று கரம்கூப்பி வணங்கினார் சுக்ர பகவான்.

அதன்படியே பெருமாள் இங்கே சயன ராமராக அர்ச்சாவதாரம் கொள்ள, சுக்ரன் விளக்காக மாறிச் சுடரொளி சிந்தினார். பெருமாளுடன் வந்த கருடன், இறைவனின் சங்கு-சக்கரத்தைத் தாங்கி எதிரே அமர்ந்து கொண்டார். திருமாலைத் தேடி வந்த திருமகள், மரகதவல்லியாக எழுந்தருளினார். அந்த இடத்தில் அசுர சிற்பியான மயன் புஷ்கலா வர்த்தக விமானம் கொண்ட அழகிய ஆலயத்தை எழுப்பினார் என்கிறது தல வரலாறு.

தேவ சிற்பியான விஸ்வகர்மா பரம்பொருளின் பல ஆலயங்களை அழகாகக் கட்டி முடித்தார். அதேபோல், தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர சிற்பியான மயன் வருந்தினார். அதன் பொருட்டு பிரம்மனைச் சந்தித்து வேண்டினார். நான்முகனின் வழிகாட்டுதல்படி, திருவெள்ளியங்குடிக்கு வந்து தவம் செய்தார்.

அவருக்குப் பெருமாள் சங்கு-சக்ரதாரியாக தரிசனம் கொடுத்தார். ``ராமாவதாரக் கோலத்தில் காட்சியருள வேண்டும்’’ என மயன் வேண்டிக்கொள்ள, தன் கரத்திலிருந்த சங்கு-சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு, கோலவில்லி ராமனாக வில், அம்புகளுடன் தரிசனம் தந்தாராம் பகவான். தொடர்ந்து, மயன் இங்கே ஆலயத்தை நிர்மாணித்தார் என்கிறது புராணம்.

வியாசரின் தந்தை பராசரர், விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியர். பராசரருக்கு ஆறு பிள்ளைகள். மிகவும் குறும்புக்காரர்கள். ஒருமுறை அவர்கள் செய்த குறும்பு பொறுக்காமல், அவர்களை மீன்களாகும்படி சபித்துவிட்டார் பராசரர்.

பின்னர் ஆத்திரம் தணிந்த நிலையில், அன்னை பராசக்தியை வேண்டினார்; `பிள்ளைகளுக்கு விமோசனம் வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தார். திருவெள்ளியங்குடிக்குச் சென்று வழிபடும்படி வழிகாட்டினாள் ஆதிசக்தி. அதன்படி இங்கு வந்த பராசர முனிவர், பெருமாளின் அருள் பெற்று பிள்ளைகளை மீண்டும் சுயரூபம் அடையச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், பெருமாளிடம் வேண்டிக் கொண்டால், அறியாமல் செய்த பாவங்கள் விலகும்; வினைகள் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சைவ சமயத்தில் சுக்ரனுக்குரிய தலமாக கஞ்சனூர் விளங்குவதைப்போல, வைணவத்தில் திருவெள்ளியங்குடி சுக்ரனுக்கு உரிய திருத்தலமாகப் போற்றப்படுகிறது. அதேபோல் திருவெள்ளியங்குடியை தரிசித்தால், 108 திவ்ய தேசங்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உண்டு.

காஞ்சி மகாபெரியவர் இந்தத் தலத்தின் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டு, இங்கு வந்து தங்கித் திருப்பணிகளையும் சிறப்பு வழிபாடுகளையும் செய்திருக்கிறாராம். அது 1974-ம் ஆண்டு. காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. அந்தச் சிரமத்துடனேயே தனது கடமைகளைத் தொடர்ந்துவந்தார்.

`அந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் பார்வை வரும்’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த மகான் மறுத்துவிட்டார். அப்படியான நிலையில், மகாபெரியவரின் பக்தர்கள் பலரும் இந்த திருவெள்ளியங்குடி ராமரிடம் வேண்டிக்கொண்டார்களாம். சிலர் நேத்ர விளக்கு ஏற்றி வழிபாடும் செய்தார்களாம். பின்னர் வந்த நாள்களில், மகாபெரியவர் அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டு பார்வை பெற்றார் என்கிறார்கள் பக்தர்கள்.

சுக்ர யோகங்கள் பெற விரும்புவோர், சுக்ரனை லக்னாதிபதியாகக்கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் லக்ன அன்பர்கள், ஜாதகத்தில் சுக்ர குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று நேத்ர விளக்கு ஏற்றச் செய்து, பெருமாளை வழிபட்டு வரம் பெறலாம்.

நேரில் செல்ல இயலாதவர்கள், கோயிலைத் தொடர்புகொண்டு உங்களுக்காக விளக்கேற்றச் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அதனால் உங்கள் நலமும் வளமும் மேம்படும் என்பது நிச்சயம்.

அகவொளியும் புறவொளியும் பல்கிப் பெருகும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருவெள்ளியங்குடிக்குச் சென்று கோலவில்லி ராமரையும், நேத்ர விளக்கையும் தரிசித்து நம் வாழ்வில் பூரண ஒளி பெறுவோம்.

444 கிடாய்கள்; 1,800 சேவல்கள்; 16 ஆயிரம் பேர்... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரமாண்ட கறி விருந்து!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப... மேலும் பார்க்க

'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்... மேலும் பார்க்க

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம்

இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் -முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஷார்ட்ஸ்’ அணிந்த பெண்களுக்குத் தடை; வேட்டி கட்டிய பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி!

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். அதனால் புதுச்சேரிக்கு வரும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தவறாமல் அங்கு சென்று விநாயகரை தரிச... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி கடற்கரை சாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் | Photo Album

விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சி... மேலும் பார்க்க