"உங்கள் கூலிப்படையினரை வேண்டுமானாலும் அழையுங்கள்" - அமித் ஷாவிற்கு 'தேதி' சொல்லு...
இலையைக் கலையாக்கி வருமானம்... ₹500 முதலீட்டில் வெற்றிபெற்ற காஞ்சிபுரம் இளைஞர்!
அதிகாலை 6 மணி… கையில் ஒரு பை… இயற்கை கொடுக்கும் இலைகளைத் தேடி ஒரு பயணம்! குப்பையாகக் கருதப்படும் இலைகளுக்கு உயிரூட்டி, அவற்றைக் கலைப்படைப்புகளாக மாற்றி வருமானம் ஈட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் கலைஞர்.
குறைந்த முதலீடு, தனித்துவமான சிந்தனை, கலை மீதான ஆர்வம்… இவை மூன்றும் சேர்ந்தால் ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்பதற்கு இவரே சாட்சி!
குப்பையிலிருந்து கலைக்கு!
மரங்களிலிருந்து உதிரும் இலைகள் சில மணி நேரங்களில் குப்பையாகிவிடுகின்றன. ஆனால், அந்த இலைகளுக்குள் மறைந்திருக்கும் அழகையும் சாத்தியங்களையும் எல்லோராலும் பார்த்துவிட முடியாது. அப்படிப் பார்க்கத் தெரிந்தவர்தான் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான கலைஞர் கலையரசன்.

படித்த படிப்பைத் தாண்டி, தனக்குப் பிடித்த கலையையே வருமானம் தரும் தொழிலாக மாற்றியிருக்கிறார். இவரது தொழிலில் விலை உயர்ந்த மூலப்பொருள்களுக்கோ, பெரிய அளவிலான இயந்திரங்களுக்கோ இடமில்லை. இயற்கையாகக் கிடைக்கும் இலைகள்தான் இவரது கலை உலகத்தின் அடிப்படை!
அதிகாலை பயணம்… அழகான படைப்புகள்!
இந்தத் தொழிலுக்கான மூலப்பொருள்களைச் சேகரிப்பதே ஒரு தனிப் பயணம். சோமங்கலத்திலிருந்து சுமார் 12–15 கி.மீ தொலைவில் உள்ள இடங்களுக்குத் தினமும் அதிகாலையில் புறப்படுகிறார் கலையரசன். காலை ஆறு மணிக்குத் தொடங்கும் இந்தப் பயணத்தில், இரண்டு மணி நேரத்துக்குள் தேவையான இலைகளைச் சேகரித்துவிடுகிறார்.

இதில் நேரம் மிகவும் முக்கியம். வெயில் அதிகரிக்கத் தொடங்கினால் இலைகள் காய்ந்து, அவற்றைக் கையாள்வது சிரமமாகிவிடும். அதனால், எந்த நேரத்தில் இலைகளைச் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்து அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுவரை திட்டமிட வேண்டியிருக்கிறது.
சேகரித்த இலைகளை வெறுமனே ஓவியமாக மாற்றிவிட முடியாது. அவற்றின் இயல்பான வடிவம், தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப கலைப்பணிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் இலைகளின் தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்பதால் பொறுமையும் நுணுக்கமும் அவசியமாகின்றன.
கலையரசனைப் பொறுத்தவரை, இலை ஓவியம் என்பது வருமானத்துக்கான தொழில் மட்டுமல்ல; மனதுக்குப் பிடித்தமானவர்களுக்குக் கொடுக்கும் அன்புப் பரிசும்கூட! ஓய்வு நேரங்களில் அரசியல் தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், விஜய், விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றோரின் உருவங்களை இலைகளில் வடிவமைத்து, சிலருக்குப் பரிசாகவும் வழங்கியிருக்கிறார்.
இயற்கை கொடுக்கும் இலைகளில் உருவாகும் இந்தப் படைப்புகள், இவரது கலை ஆர்வத்துக்கு அழகான அடையாளங்கள்!

₹500 முதலீடு… ₹1,000 விற்பனை!
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவை என்று நினைப்பவர்களுக்கு, கலையரசனின் முயற்சி ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறது. இலைகளைச் சேகரிப்பது முதல் கலைப்பணிகளை உருவாக்குவது வரை தேவையான கத்தி, டேப், லேமினேஷன் உள்ளிட்ட பொருள்களுக்குச் சுமார் ₹500 ஆரம்பச் செலவாகிறது.

ஒரு படைப்பை உருவாக்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தேவைப்படுகிறது. அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு படைப்புக்கு சுமார் ₹1,000 விலை நிர்ணயம் செய்கிறார். மாதந்தோறும் 20–30 ஆர்டர்கள் கிடைக்கின்றன. இதுதவிர, TCS போன்ற நிறுவனங்களில் அரங்குகள் அமைத்துத் தனது கலைப்பொருள்களை விற்பனை செய்வதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது.
கலைக்கு விளம்பரம்… வாடிக்கையாளர்களே தூதர்கள்!
ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதைப் பொருத்தமான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் அவ்வளவு முக்கியம். திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனது கலைப்பணிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கலையரசன்.

இன்ஸ்டாகிராம், நண்பர்கள் மற்றும் ஏற்கெனவே இவரிடம் கலைப்பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் மூலம் புதிய ஆர்டர்களும் கிடைக்கின்றன. ஒரு வாடிக்கையாளருக்குப் பிடித்தமான படைப்பு, அடுத்த வாடிக்கையாளருக்கான அறிமுகமாக மாறுகிறது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களையும் தனிப்பட்ட தொடர்புகளையும் தனது தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வருகிறார்.
அடுத்த இலக்கு… கற்றுக்கொடுப்பது!
தனது கலைப்பணிகளை விற்பனை செய்வதோடு பயணத்தை நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை கலையரசன். இந்தக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, எதிர்காலத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்பதே இவரது கனவு. கிராமத்தில் இருப்பதால் நகர்ப்புற மாணவர்கள் நேரில் வந்து கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. அதனால், தொலைபேசி வாயிலாகவும் இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார்


















