மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!
``கடைசி நேர ரிப்போர்ட்... கடுப்பான ஸ்டாலின்” - வேகம் எடுத்த உடன்பிறப்புகள்!
உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும், சில தொகுதிகளில் கட்சியினர் காட்டும் சுணக்கமும் தி.மு.க தலைமையை டென்சனாக்கியுள்ளது. இரண்டு நாட்களுக்குள் முழுவீச்சில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டுமென முதல்வர் கடுமைக்காட்டியுள்ளது.
“தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லும்” என தொடர்ந்து பிரசாரங்களில் முழங்கி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.ஆனால், கடந்த ஒரு வாரமாக தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான கருத்து கணிப்புகள் தி.மு.க கூட்டணி 150-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என குறிப்பிட்டிருந்தனர்.இது தி.மு.க தலைமைக்கு ஷாக்கை கொடுத்தது. தமிழக உளவுத்துறை அதிகாரிகளும் கடந்த ஒரு வாரமாக பல கட்ட சர்வேக்களை நடத்தியிருக்கிறார். அந்த முடிவுகளை அவ்வப்போது, முதல்வர் வசம் ஒப்படைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலையோடு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் முழுமையாக நிறைவடைய உள்ளது. இறுதி கட்ட நிலவரம் குறித்து இன்று காலை முதல்வர் கைக்கு ஒரு ரிப்போர்ட்டை உளவுத்துறை கொடுத்திருக்கிறது. அந்த ரிப்போர்டில், இன்றைய நிலவரப்படி 125 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும் எனவும்,25 தொகுதிகளை மட்டுமே கூட்டணிக் கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ளது எனவும் அந்த ரிப்போர்டில் கூறிப்பிட்டுள்ளனர். இந்த ரிப்போர்ட் வந்தவுடன், காலையில் வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த ஆலோசனையில் முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்துள்ளார். ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு கடும் டென்சனில், முதல்வர் பேசியிருக்கிறார். “எல்லா திட்டங்களையும் நாம் செய்திருக்கிறோம்.கடந்த வாரம் 150 தொகுதிகளுக்கு மேல் வரும் என சொல்லிவிட்டு, இப்போது இவ்வளவு குறைவாக காரணம் என்ன?...” என்று கடுகடுத்துள்ளார். மற்றொருபுறம் பென் நிறுவனம் கொடுத்த சில ரிப்போர்ட்களை வைத்தும் ஆலோசனை நடந்துள்ளது.
தி.மு.க செயல்பாடு போய் சேரவில்லை என்கிற தகவல் தி.மு.க தலைமைக்கு வந்தது. அது குறித்தும் தீவிரமாக டிஸ்கசன் நடந்துள்ளது. முதல்வர் வீட்டிலிருந்தே, மண்டல பொறுப்பாளர்களுக்கும் போன் சென்றுள்ளது. மண்டல வாரியாக ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து முதல்வர் கேட்டிருக்கிறார்.அதோடு சபரீசனிடம் எந்தெந்த தொகுதிகள் வீக்காக உள்ளது, அதில் கடைசி கட்டத்தில் நடக்க வேண்டிய பணிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி , தோல்வியை ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளே நிர்ணயம் செய்யும் என் ரிப்போர்டில் கொடுத்துள்ளார்கள். தற்போது தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்டவர்கள். வெற்றி தோல்விக்கான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால், தேர்தல் நடத்தும் அதிகாரி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கு முன்பாகவே பணிகளை முறையாக முடித்துவிட வேண்டும் தலைமை தரப்பிலிருந்து உத்தரவு போய் உள்ளது. சில இடங்களில் கட்சியினர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்கிற தகவலும் தலைமைக்கு வந்துள்ளது. அது குறித்தும் அந்த ஆலோசனையில ் பேசியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் முதல்வர் கடும் கடுப்பில் இருந்திருக்கிறார். “தனித்து தி.மு.க ஆட்சியை பிடிக்க வேண்டும்...அதில் எந்த சிக்கலும் இருக்க கூடாது” என கட்சியினருக்கு உத்தரவிட்ட பிறகு தான் பிரசார களத்திற்கு கிளம்பியிருக்கிறார் முதல்வர். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து கடைசி நேர வேலைகள் வேகப்படுத்தியுள்ளனர் தி.மு.க-வினர்.
















