செய்திகள் :

பரியேறும் பெருமாள் : பேரவலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

post image

குழந்தைகளுக்குள் எந்த வன்மமும் இல்லை, எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.

வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு, சக நண்பர்களோடு முயல் பிடிப்பதற்காக வனாந்தரங்களில் அலைந்து திரிகிறான் பரியன். பார்வைக்கு இளைஞனாக இருந்தாலும், தொடக்கத்தில் இந்தச் சமூகத்தின் பேரவலமான ஏற்றத்தாழ்வுகள் புரியாத சிறுவனாக இருக்கிறான் அவன். ஏதாவது திருட்டு நடந்தால்கூட அவர்கள்தான் காவல்துறையின் எளிய இலக்காக இருக்கிறார்கள். அதன் பின்னணி அவனுக்குப் புரிவதில்லை. காவலர்கள் விசாரணைக்காகக் கொண்டு போய் குத்துக் காலிட்டு உட்கார வைத்தாலும் அதைப் பற்றிய பெரிய கேள்விகள் இல்லை அவனுக்கு.

அவர்களை அழைத்துப் போக வந்த ஊர்ப் பெரியவரான ஆர்.கே.ராஜாவை போலீஸ்காரர்கள் அடித்து, அவமானப்படுத்தும் போதும் அதைச் சகித்துக்கொள்கிறான். அந்த அவமானத்தால் வெளிப்படும் ராஜாவின் கண்ணீரையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ’நம் சமூகத்திலிருந்து ஒருத்தனாவது படித்து வக்கீலாக வாருங்கள்’ என்ற அவரது ஆதங்கத்தைக்கூட, அவன் அவரது தனிப்பட்ட விருப்பமாகவே ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும். அதன் பின்னர்தான், அந்தச் சிறுவனுக்குரிய மனத்தைக் குத்திக் கிழித்தபடியே இந்தச் சமூகம், இந்த மண்ணின் பேரவலமான ஏற்றத்தாழ்வை அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது.

பரியேறும் பெருமாள்

இன்னொரு புறம் புதுக்கருக்கு நீங்காத உடைகள், மல்லிகை சூடிய கூந்தல் என எந்த வன்மத்தையும் அறியாத, புன்னகை பூத்த முகமாக வளைய வருகிறாள் ஜோ. அப்பாவின் மீது அவளுக்கு அத்தனைப் பாசம். குடும்பத்தார் மீது அவளுக்கு அத்தனை நம்பிக்கை. அவர்களின் சீழ்பிடித்த மனதை அறியாத அந்த அறியாமையைப் பார்க்கும் போது அவள் மீது நமக்குப் பரிதாபம்தான் வருகிறது. அவளுக்குப் பரியனை மிகவும் பிடித்துப் போகிறது. அதற்குக் காதல் என்று பெயர் சூட்டவும்கூட அவளுக்குத் தெரியவில்லை. அப்பாவைப் பற்றிப் பரியனிடம் பேசுவதைப் போலத்தான் பரியனைப் பற்றி அப்பாவிடம் பேசுவதும் என்று நினைக்கிறாள். ஆனால், கடைசி வரை அவளை எந்த அவலமும் சீண்டிவிடாதபடி அவளது அப்பா பார்த்துக் கொள்கிறார், பரியனும் அவள் மீது கொண்ட அன்பின் மிகுதியால் அதற்கு ஒத்துழைக்கிறான்.

அன்பின் ஆதரவு கூட இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கிறது, இன்னொன்றுக்கு கிடைப்பதில்லை. ஜோவுக்குக் கிடைக்கிறது, பரியனுக்கு இல்லை!

கருப்பி எனும் நாயின் கொலையோடு தொடங்குகிறது இந்தப் படத்தின் கதை. ஒரு மனிதன் கொல்லப்பட்டதற்கு இணையான கொந்தளிப்பான உணர்வெழுச்சியைத் தரும் காட்சிகள் அவை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த பரியேறும் பெருமாள் எனும் இளைஞன், சட்டம் படிக்க சட்டக்கல்லூரிக்கு வருகிறான். ஆங்கிலம் அவனை வதைக்கிறது. ஜோ எனும் பெண் அவனுக்கு உதவுகிறாள். அதனால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகிறது. அதைக் காதலாகக்கூட அவர்கள் இன்னும் வளர்த்தெடுக்கவில்லை. அந்த நிலைக்குப் போயிருந்தால், இருவரில் ஒருவர் சமூகச் சிக்கல்களை உணர்ந்து விலகியிருந்திருக்கவும்கூட வாய்ப்பிருந்தது. அதற்கு முன்னதாகவே ஏற்றத்தாழ்வு அவர்களின் உறவுக்கு வண்ணம் பூசுகிறது.

ஜோ அழைத்தாளென்று, அவள் வீட்டுக் குடும்பவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகப் போகிறான் பரியன். அதனைத் தொடரும் காட்சிகள் எத்தனைக் கீழ்த்தரமான, அநீதியான சாதியச் சமூகம் நம்முடையது என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. பார்வையாளர்களை நோக்கி அவை எழுப்பும் கேள்விகள்தான் இந்தப் படத்தின் உண்மையான கதை!

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள்

இவ்வளவு வெளிப்படையாக இந்தச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் துயரத்தைப் பதிவு செய்த முதன்மையான தமிழ்ப்படம் ’பரியேறும் பெருமாளா’கத்தான் இருக்க வேண்டும். படத்தைத் தயாரித்திருந்தவர் நீலம் புரடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமின் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜின் முதல் படம் இந்தப் பரியேறும் பெருமாள். இத்தனைத் தீவிரமாகவும், அதே நேரம் இயல்பு மீறாமலும் இந்தச் சமூகத்தின் அசிங்கமான பக்கங்களைத் திறந்து காண்பிக்கும் வேலையைச் செய்தது மாரியின் திரைக்கதை.

ஆதிக்கம் தயக்கமின்றிக் கொலைகளைச் செய்கிறது. கொலைகளை விடவும் கொடூரமான அவமானத்தை ஏற்படுத்துகிறது. தமது வலிமையை பெண்களின் மீது சுமத்தி அவர்களையும் ஒடுக்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதிப் பையனைக் காதலிக்கும் பெண்கள் கழுத்தை நெறித்துக் கொல்லப்படுகிறார்கள். ஆதிக்கச் சாதிப் பெண்ணைக் காதலிக்கும் பையன்கள் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்படுகிறார்கள். காதலிக்கிறானோ எனும் சந்தேகம் எழுந்தாலே, அடித்து, முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது தந்தையர் ஆடைகள் உருவப்பட்டு தெருவில் ஓடவிடப்படுகிறார்கள். இத்தனைக் கீழ்த்தரமான சாதி எனும் கட்டமைப்பைத்தான் நாம் இன்றும் கட்டிக் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம்.

எப்போதும் ஆபத்தும், அவமானமும் பரியனைச் சுற்றிச் சுற்றி வருகிறது. எதிர்பாராத விதமாகப் பெண்களின் கழிவறைக்குள் அவன் தள்ளப்பட்டு கதவுகள் அடைக்கப்படுகின்றன. தவித்துப் போகிறான். ஆத்திரம் கொப்பளிக்க அலைகிறான். தள்ளிவிட்டவர்களை வெட்டிக் கொல்ல முடியுமா என்று அவன் மனம் அலைபாய்கிறது. அதனால், ஒருநாள் குடித்துவிட்டு தவறுதலாக வகுப்புக்கும் வந்துவிடுகிறான். விளைவாக பிரின்சிபலின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறான்.

பரியேறும் பெருமாள்

அவனிடம் அவர், ”பீத் தின்கிற பன்னியைப் போல என்னை அடிச்சி அடிச்சி விரட்டினானுக. ஓடியா ஒழிஞ்சிப் போயிட்டேன் நான்? எது அவசியம்னு தெரிஞ்சுகிட்டு பேய் மாதிரி படிச்சேன். இன்னிக்கு உனக்கு பிரின்சிபலா நிக்குறேன். அன்னிக்கு என்னை அடக்கணும்னு நினைச்சவன்லாம், ஐயா சாமின்னு என்னைப் பாத்து கையெடுத்துக் கும்புடுறான். உங்கப்பாவையும், உன் சூழ்நிலையையும் பாத்தபிறகு சொல்றேன், என்னை மாதிரி நீயும் ஜெயிச்சு வருவேன்னு நான் நம்புறேன். இதை மனசுல வைச்சுக்கிட்டு உனக்கு என்ன தோணுதோ செய், போ!” என்று சொல்லியனுப்புகிறார்.

அருகிலிருக்கும் புரபஸர் பதற்றத்துடன், ”என்ன சார் இப்படி சொல்லியனுப்புறீங்க, திரும்பவும் சண்டைக்குப் போயிடப் போறான்?”

”போனாப் போயி சண்டை போடட்டும். வீட்டுல போயி அவமானத்துல தூக்குல தொங்கி சாகுறதைவிட சண்டை போட்டு சாகட்டும். இவனை அவமானப் படுத்துறவனுங்களை நம்மால திருத்தமுடியுமா?”

முடியாது என்பதாக தலையசைக்கிறார் அவர்.

”பின்ன? இவனை மட்டும் ஏன் அடக்கணும்?” என்கிறார் பிரின்சிபல். எத்தனை நூற்றாண்டுகளின் வலி அந்தக் குரலில்!

பரியேறும் பெருமாளாக நடித்தது கதிர். மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமாகி, விக்ரம் வேதாவின் கவனிக்கப்பட்ட கதிர், இந்தப் படத்தில் கதாநாயகனாக, அதுவும் இப்படியொரு தீவிரமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஜோவின் வீட்டு விழாவில் தமக்கு ஏன் இப்படி ஒரு அநீதி நடந்தது, நாம் அப்படி என்ன தவறு செய்தோம் என்று தவிக்கும் போதும், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூடத் தெரியாமல் உழலும் போதும் அவரது வலியை நாம் உணரமுடிந்தது.

ஜோ எனும் ஜோதி மகாலட்சுமியாக ஆனந்தி நடித்திருந்தார். ’ஏன்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஏ ஃபார் ஆப்பிள்தான் சொல்லணும், ஆனந்த் என்று சொல்லக்கூடாது’ என்று ஒரு வளர்ந்த குழந்தையைப் போலப் பேசும் ஆனந்தியின் அப்பாவித்தனமும் அன்பும் நம்மை ஈர்க்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் சாதி எனும் தளை புரியாமல் பரியனோடு அன்பு பேணத் துடிப்பதும், கடைசிக் காட்சியில் பரியனைத் தன் தந்தையோடு பேச வைத்துவிட்டு எல்லாம் சரியாகிவிட்டது என்று நம்புவதும்... இந்தப் பெண் இப்படியே வெகுளியாக இருந்துவிட்டுப் போகட்டுமே எனும் எண்ணத்தையே நமக்குள் ஏற்படுத்திவிடுகிறார் ஆனந்தி.

ஆனந்தியின் அப்பாவாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். யோகி பாபு, சண்முகராஜன், பூ ராமு போன்றோர் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீதர்; இசை சந்தோஷ் நாராயணன். இரண்டு அம்சங்களிலுமே கலையம்சம் மிளிர்ந்தது. படத்தின் நிலப்பரப்புகள், கல்லூரிச் சூழல் என எல்லாவற்றையும் இயல்பு குலையாமல் பதிவு செய்திருந்தது ஒளிப்பதிவு. பாடல்கள் அனைத்துமே கதையின் உணர்வுகளை அள்ளிக்கொண்டு வந்தன. விவேக் எழுதி, யோகி சேகர், ஃபரீதா பாடிய ’பொட்டல் காட்டில் பூவாசம்’ பரியன் -ஜோவின் உறவின் அழகைச் சொன்னது. மாரி செல்வராஜ் எழுதிய கதையின் மையப் பாடலான ’நான் யார்’ பாடலை சந்தோஷ் நாராயணன், விஜய் நரேன், அனந்து ஆகியோர் இணைந்து பாடியிருந்தார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் நம்பிக்கையின் குரலாக ஒலிக்கும், ’வா ரயில் விடப் போலாமா?’ எனும் பாடல் பெரும் பாரத்தை நம் மனங்களில் இறக்கி வைக்கிறது. இந்தப் பாடலை விவேக் எழுதி, பிரீதிகா பாடியிருந்தார்.

நடந்தது, நடக்கப்போவது என எதையுமே அறியாத ஜோ இறுதிக் காட்சியில் அவள் விருப்பப்படி, தந்தை ஸ்ரீராமையும், பரியனையும் சந்திக்க வைக்கிறாள். அவளுக்குப் பெரும் உற்சாகம். இருவரையும் கல்லூரி வளாகத்தின் சிமெண்ட் பெஞ்சுகளில் அமர வைத்துவிட்டு, அவர்களுக்காக காபியையும், தனக்காக ஒரு குளிர்பானத்தையும் வாங்கிக் கொண்டு வரச் செல்கிறாள். ஸ்ரீராம் எங்கோ ஏதோ பெரிய தவறு இருப்பதை உணர்கிறார். ஆனால் அது எதையும் மாற்றும் விழைவோ, வலிமையோ அவருக்கு இல்லை. ஸ்ரீராமும் பரியனும் பேசிக்கொள்கிறார்கள்.

”உனக்கு நாங்க இவ்வளவு பண்ணினோமே, நீ ஏம்ப்பா என் பொண்ணுகிட்ட எதையும் சொல்லவே இல்ல?” என்று கேட்கிறார் ஸ்ரீராம். அதற்கு, ”உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்? உங்க பொண்ணுக்கு என்ன விட உங்களத்தான் சார் ரொம்ப பிடிக்கும். எனக்குக் கிடைச்ச மாதிரி அப்பா வேற யாருக்கும் கிடைச்சிருக்கவே மாட்டாங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. அந்த நம்பிக்கையைத் தகர்த்து அவ சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம்னுதான் சொல்லல” என்கிறான் பரியன்.

”நன்றிப்பா” என்றவர் மேலும் தயங்கியபடி கேட்கிறார்.

”எம் பொண்ணு உன் மேல பைத்தியமா இருக்காளே, உனக்கு அவ மேல எந்த எண்ணமும் இல்லையா?”

”தெரியல சார்... அது என்னான்னு யோசிக்கிறதுக்குள்ளதான் நாயை அடிக்கிற மாதிரி அடிச்சி, ரத்தம், சதைனு குத்திக் கிழிச்சிட்டீங்களே...”

”ஸாரிப்பா. நீ ஆசைப்பட்ட மாதிரியே வாழ்க்கையில பெரிய ஆளா வருவ. நல்லா படி. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும். பார்க்கலாம்... நாளைக்கு எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாமில்லையா? யாருக்குத் தெரியும்?”

”எனக்குத் தெரியும் சார். நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நான் நாயாத்தான் இருக்கணும்னு எதிர்பார்க்கிற வரைக்கும், இங்க எதுவுமே மாறப்போறதில்ல”

இங்கே வளர்ந்தவர்களுக்குள்தான் யாரோ திணித்துவைத்த வன்மமும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்து வழிகின்றன.!

"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இப்... மேலும் பார்க்க

Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்

'அரசன்' படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்' கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீ... மேலும் பார்க்க

'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க

அனிருத் - காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை...' - யாருக்கெல்லாம் அழைப்பு?!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல... மேலும் பார்க்க

Jafar Panahi: பிரபல இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு 5 ஆண்டுகள் சிறை; பின்னணியும் தொடரும் ஒடுக்குமுறைகளும்

ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதிய... மேலும் பார்க்க