பிரேக்அப் செய்த லிவ்-இன் காதலி; வீடியோ கால் செய்து வளர்ப்பு நாய்களை செங்கலால் அ...
பிரேக் குறைபாட்டுடன் 463 கி.மீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவு... என்ன நடந்தது?
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே பாரத் ரயில் ஒன்று சுமார் 463 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஹதியாவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிக்கு, பயணிகள் இல்லாத வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சரக்கு ரயில் இன்ஜின் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, வந்தே பாரத் ரயிலின் பிரேக் அமைப்பை சரக்கு ரயில் இன்ஜினுடன் முறையாக இணைக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்கள் இந்த இணைப்பைச் சரியாகச் செய்யத் தவறியதுடன், ரயில் குழுவினர் விடுத்த எச்சரிக்கையையும் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஞ்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு (DRM) தென்கிழக்கு ரயில்வே பிறப்பித்துள்ள அதிகாரபூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, ``ஹதியா - ராஞ்சி வழித்தடத்தில் ரயில் புறப்பட்ட பிறகு பிரேக் திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரயிலின் பிரேக் திறன் மிகவும் பலவீனமாகவும், செயலற்றதாகவும் இருப்பதை லோகோ பைலட் கண்டறிந்தார். தொடர்ந்து ராஞ்சி ரயில் நிலையத்தை அடைந்ததும், இது குறித்துப் பிரிவு கட்டுப்பாட்டாளர் மற்றும் இழுவை லோகோ கட்டுப்பாட்டாளரிடம் லோகோ பைலட் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
இருப்பினும், அந்தப் புகாரைப் பொருட்படுத்தாமல் அதே நிலையிலேயே ரயிலைத் தொடர்ந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் பிரேக் அமைப்புகள் செயல்படாத நிலையில், வெறும் சரக்கு ரயில் இன்ஜினின் பிரேக் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative braking) ஆகியவற்றை மட்டுமே நம்பி சுமார் 463 கி.மீ தூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. போதிய பிரேக் திறன் இன்றி ரயிலை இயக்குவது என்பது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும்.

இது பெரும் விபத்துகளுக்கு வழிவகுத்து, ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு ரயில்வே செயல்பாடுகளின் பாதுகாப்பையும் பாதிக்கும். எனவே, இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கவனக்குறைவைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

















