RTI விவகாரம்: "எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?" - தவெக அரசுக்கு உதயநிதி கேள...
விசாரணை : அரசு எந்திரம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 33
”என்னைக் கஸ்டடியில் வைச்சிருக்கிறது நீங்கதான் மிஸ்டர் முத்துவேல். இப்ப நீங்கதான் பெரிய ஆள்” என்று இன்ஸ்பெக்டர் முத்துவேலைப் பார்த்துச் சொல்கிறார் கேகே. பதிலுக்கு,
”நான் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். நீங்கதான் உண்மையிலேயே பெரியாள் கேகே” என்கிறார் அவர்.
”நீங்கன்னா நீங்க இல்ல முத்துவேல். நீங்கன்னா இந்த சிஸ்டம். நம்ம எல்லோரையும் விட இந்த சிஸ்டம்தான் பெரிசு. இப்ப நம்மை வைச்சு இங்க ஒரு சதுரங்க ஆட்டம் ஆரம்பிச்சிருக்குது. அதுல நாமெல்லாம் வெறும் சிப்பாய்கள்தான்” என்று ஓர் ஆழ்ந்த பொருளுடன் சொல்கிறார் கேகே.

முன்னர் ஆட்சியிலிருந்த, அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போகிற பலமான ஒரு கட்சியின் தலைவரோடு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய புரோக்கர்தான் இந்த கேகே. தொழில்முறையில் ஓர் ஆடிட்டர். அந்தத் தலைவரை மாதிரியான அனேக விஐபிக்களுக்கும் கூட மிக நெருக்கமானவர். அப்படியான பலரின் பல்லாயிரம் கோடிகளை நிர்வகிக்கவும், இடமாற்றவும், முதலீடு செய்யவும் கூடிய திறன் கொண்டவர். மாறாக முத்துவேல், தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். ஆனால், இப்போது அதிகாரம் முத்துவேலிடம் இருக்கிறது. கேகே சொல்வது போல, அங்கே அப்போது தொடங்கியிருக்கும் ஓர் ஆபத்தான அரசியல் சதுரங்க விளையாட்டில் கேகேவும், முத்துவேலுமே எப்போது வேண்டுமானாலும் வெட்டுப்படப்போகும் சாதாரண சிப்பாய்களின் நிலையில்தான் உள்ளார்கள்.
அப்படியானால்,
இங்கே பிழைக்கவும் வழியில்லாமல், ஆந்திராவுக்குப் போய் எளிய வேலைகளைச் செய்துகொண்டு, இரவு தங்குவதற்குக்கூட ஓர் அறைக்கு வழியின்றி கார்ப்பரேஷன் பூங்காவில் படுத்துறங்கும் விளிம்பு நிலை மனிதர்களான பாண்டியும், முருகனும், அஃப்சலும் அந்தச் சூழலில் மாட்டிக்கொண்டால் அவர்களின் நிலை என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டும் அந்த நிலையைத்தான் ’விசாரணை’ விவரித்துக் காட்டுகிறது. அரசு எந்திரம் என்றால் என்ன? அது இயங்கும் விதம் எப்படி? அதில் மாட்டிக்கொண்டால் விளிம்பு நிலை மனிதர்கள், சாமானியர்கள் மட்டுமின்றி படித்தவர்கள், பலமானவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட எப்படி மீளவே முடியாமல் அழிக்கப்படுவார்கள் எனும் உண்மையை பதறச் செய்யும் வண்ணம் எடுத்து வைக்கிறது ’விசாரணை’.

பாண்டி, முருகன், அஃப்சல், குமார் எனும் நான்கு தமிழ் இளைஞர்களும் பிழைப்புக்காக ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்து வாழும் எளிய தொழிலாளர்கள். முருகன் அதிகாலை முதல் இரவு வரை ஒரு மளிகைக் கடையில் 18 மணி நேரம் உழைப்பவன். அவர்கள் வாழும் அந்தப் பகுதியிலுள்ள ஒரு போலீஸ் உயரதிகாரியின் வீட்டில் பெருமதிப்புள்ள பொருட்களும், பணமும் திருடு போகின்றன. திருட வந்தவர்களில் ஒருவன் தமிழ் பேசியிருக்கிறான். அதனால் போலீஸ்காரர்கள் தமிழ்க் குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நிஜமான குற்றவாளிகள் சிக்கவில்லை. திருடு கொடுத்த அதிகாரிக்கோ, போலீஸ் துறைக்கோ உண்மையான திருடர்களைப் பிடிக்க வேண்டுமெனும் நோக்கம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அது மாநிலத்தின் காவல்துறை மீதான கவுரவத்தோடு சம்பந்தப்பட்டது. காவல்துறை மீதான பயம், மரியாதை என்பதெல்லாம் ஓர் அரசு எந்திரத்தின் அடிப்படைத் தேவை.
அதனால் கேட்க நாதியில்லாத இந்த நால்வரையும் பிடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள். அடி தாங்க முடியாமல் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்குப் போனாலும், பாண்டி ’பொய்க் குற்றத்தை ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை’ எனும் முடிவில் மிக உறுதியாக இருக்கிறான். இன்னொரு புறம் தமிழ்நாட்டில் கேகே எனும் ஒரு பெரிய அரசியல் புரோக்கர், ஒரு வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்கிறான். இந்த இரண்டு கதைகளும் எப்படி இணைகின்றன, பாண்டியும், கேகேவும் என்னவானார்கள் என்பது கதையின் முடிவு.

விசாரணை எனும் பெயரில், விசாரணைக் கைதிகள் மீது இந்தியாவில் காவல்துறை நடத்தும் வன்முறை மற்றும் சித்திரவதை (Custodial Torture / Police Brutality) என்பது காலங்காலமாக நடந்து வருகிற, மிக மோசமான ஒரு மனித உரிமை மீறலாக இருக்கிறது. காவல்துறையினரின் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகும் நாடுகளில் பிரேசில், ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு இந்தியாவும் உலகளவில் முன்னணி இடத்தில் இருக்கிறது. விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கவும், தகவல்களைப் பெறவும் காவல்துறை சித்திரவதைகளைக் கையாளுவதற்குக் காரணமாக, விசாரணைக் கைதிகளுக்கான போதிய சட்டப் பாதுகாப்பு இல்லாததே முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஐநா சபையின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை (UNCAT) இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் அமைந்துள்ள சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (World Organisation Against Torture – OMCT) வெளியிட்ட ’உலகளாவிய சித்திரவதைக் குறியீடு 2025’ (Global Torture Index 2025) அறிக்கையின்படி, சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற நடத்தைகள் நிகழும் ஆபத்து அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தளவுக்கு மோசமாக இருக்கும் இந்தியக் காவல்துறையின் நிலையை அழுத்தமாகச் சொல்லும் ஒரு கதையாக விசாரணை அமைந்ததோடு, வெனிஸ் பன்னாட்டு திரைவிழா போன்ற உலகளாவிய திரைவிழாக்கள் மூலமாக அதை உலகின் பார்வைக்கும் கொண்டு சென்றது.
கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன், வுண்டர்பார் நிறுவனத்துக்காக தனுஷ் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தார்கள். திரைக்கதை எழுதி இயக்கியிருந்தது வெற்றிமாறன். இதன் ஆதாரக் கதை கோவையைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநரான எம். சந்திரகுமார் என்பவர் எழுதிய ’லாக்கப்’ எனும் தமிழ் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. 2006-ல் வெளியான லாக்கப் நாவல், சந்திரகுமார் அவரது இளம் வயதில் எதிர்கொண்ட காவல் துறையின் விசாரணைக் கைது மற்றும் வன்முறை போன்ற அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாம்.

வெற்றிமாறன், அதன் மீது அரசாங்கம் எனும் எந்திரம் இயங்கும் விதமும், அதன் அதிகாரத்தின் விளையாட்டுகளும் வெளிப்படும் வண்ணம் மிகச் சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார். விசாரணை அந்த ஆண்டுக்கான ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டது. அதோடு சிறந்த தமிழ்ப்படம், சிறந்த துணை நடிகர் (சமுத்திரக்கனி), சிறந்த படத்தொகுப்பு (கிஷோர்) ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது.
பாண்டியாக வி.ஆர்.தினேஷ், முருகனாக ஆடுகளம் முருகதாஸ், கேகேவாக கிஷோர், முத்துவேலாக சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தார்கள். எல்லோரும் மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தார்கள். தினேஷும், முருகதாஸும் ஆந்திர காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருந்தார்கள்.

மறுவாசிப்புக்காகக்கூட அந்தக் காட்சிகளை மீண்டும் பார்க்கத் துணியமுடியவில்லை. எல்லா சூழ்நிலையையும் சரியாக விளங்கிக்கொள்ளும் திறன் கொண்ட கேகே, தன்னால் பலன் பெற்ற ரத்னசாமி எனும் ஏசிபியே திடுமென தன்னைத் தாக்குவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த இடத்தில், கேகேவாக கிஷோர் பிரமாதமாக நடித்திருந்தார். இன்ஸ்பெக்டர் முத்துவேலாக பாண்டியையும், முருகனையும் என்கவுண்டரில் கொல்லும்படியாக ஆணை கிடைத்ததும், அதை ஏற்கவும் முடியாமல், ஆனால் அதைச் செய்யவும் முடியாமல் திணறும் இடத்தில் சமுத்திரக்கனி நெகிழவைத்தார். இன்னும் ஆனந்தி, சரவண சுப்பையா, அல்வா வாசு, அஜய் கோஷ், ராமதாஸ் போன்றோரும் நடித்திருந்தார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. உலகளாவிய கலைப் படங்களுக்கேயுரிய இயல்பு மீறாத அளவில் பின்னணி இசையமைப்பு செய்யப்பட்டிருந்தது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உதவியாளராக இருந்த எஸ்.ராமலிங்கம் இந்தப் படத்தின் ஒளிப்பதிவைச் செய்திருந்தார். இரண்டு வெவ்வேறு காவல் நிலையங்கள் படத்தின் முக்கியப் பகுதிகளில் இடம்பெற்றிருந்தன. ஒன்றின் தன்மையும், நிகழ்வுகளும், அதன் மனிதர்களும் வேறாகவும், இன்னொன்றில் அது அனைத்துமே வேறாகவும் இருந்தன. அந்த வித்தியாசத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார் ராமலிங்கம். யாரையுமே மிகைபுனைவுக்குள் கொண்டு போய்விடாமல், ஒரு டாக்குமெண்டரியைப் போல உருவாக்க வேண்டும் எனும் இயக்குநர் வெற்றிமாறனின் இலக்கைச் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றியிருந்தார்.

சிஸ்டத்தின் விநோதமான முரண்பாடுகளும் திரைக்கதையின் போக்கில் பதிவாகியிருந்தன. பாண்டியும், முருகனும் ஆந்திர காவல்நிலையத்தில் சிக்கிக்கொண்டதும், காரணமே சொல்லப்படாமல் அடித்து வெளுக்கப்படுகிறார்கள். இப்படியொரு குற்றம் நிகழ்ந்திருக்கிறது, அதற்காகத்தான் உங்களை விசாரணைக் கைதிகளாக பிடித்துச் செல்கிறோம் என்று சொன்னால் கூட அவர்கள் மனதளவில் தயாராகிவிடக்கூடும். ஆனால், அதைக்கூட சொல்லாமல், அவர்களின் உடல் உறுதியையும், மன உறுதியையும் சிதைக்கும் ஏற்பாடு அது. பச்சைப் பனை மட்டையால் அடிக்கப்பட்டு பாண்டியின் முதுகுத் தோல் கிழிகிறது. எத்தகைய எதேச்சதிகாரமான, மனிதாபிமானமற்ற செயல்! எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எத்தனைக் கொடூரமாகச் செயல்படும் என்ற உண்மை நம் மனதை உலுக்குகிறது.
ஆனால், மரணமே நேர்ந்தாலும் பரவாயில்லை எனும் இடத்துக்குப் போய்விட்டார்கள், இனி என்ன செய்தாலும் இவர்கள் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனும் நிலை ஏற்பட்ட பின்னர், ’டிபார்ட்மெண்டுக்கே கெட்ட பேராயிடும்டா, அந்த இன்ஸ்பெக்டர் பாவம், அவருக்கு வேலையே போயிடும்டா, 6 மாசத்துல வெளிய வந்ததும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு தர்றோம்டா, செஞ்சதா ஒத்துக்குங்கடா’ என்றெல்லாம் காவலர்கள் பாண்டியிடமும், முருகனிடமும் இறைஞ்சுகிறார்கள். பச்சை மட்டையை வைத்து பாண்டியின் முதுகைக் கிழித்த அந்த இன்ஸ்பெக்டர் பாவமாம், எத்தனை பெரிய முரண்! போலவே, முத்துவேல் ஓர் இயல்பான மனிதராக, காவலர்களிடம் சிக்கித் தவிக்கும் பாண்டியையும், முருகனையும் காப்பாற்றுகிறார். ஆனால் அதே முத்துவேல்தான் இறுதியில் அவர்கள் இறப்புக்கும் காரணமாகவும் இருக்கிறார்.
பாண்டியும், முருகனும் மிக எளிய மனிதர்கள். ஆந்திராவின் காவல் நிலையத்தில், அவர்களின் மரணத்தால் சிஸ்டத்துக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் அது அங்கே அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஆனால், அவர்களைக் கொல்வதுதான் சிஸ்டத்தின் தேவை எனும் நிலைமை சென்னையில் இன்னொரு இடத்தில் ஏற்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் அவர்களைச் சுட்டுத் தள்ளிவிடுகிறது. அப்படியான எளிய மனிதர்களை மட்டுமல்லாது, பெரும் சக்தியும் பணமும் படைத்த கேகேவையும், தன் அங்கமாக இருக்கும் முத்துவேலையும் கூட சிஸ்டம் தயக்கமின்றிப் பலிகொண்டுவிடுகிறது. அரசு எந்திரம் என்பது ஓர் அகோரப் பசி கொண்ட வேழம். பெரும்பலாவாக இருந்தாலும் சரி, சிறு அத்தியாக இருந்தாலும் சரி, அதன் பசிக்கு எதுவுமே தப்புவதில்லை!


















