"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் ...
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு... குடும்பங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய 8 டிப்ஸ் என்னென்ன தெரியுமா?
நடுத்தரக் குடும்பங்களுக்கு பணவீக்கம் என்பது வெறும் விலைவாசி உயர்வு அல்ல; சம்பளம் உயர்வதைவிட செலவுகள் வேகமாக உயரும்போது சேமிப்பும் முதலீடும் பாதிக்கப்படுவதுதான் பெரும்பாலானோரின் உண்மையான பிரச்னை.
வருமானம் உயராமல் செலவுகள் மட்டும் உயரும்போது ஏற்கெனவே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பெரிதாகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் கடனாளிகள் ஆவதும் அதிகரிக்கும்.
எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையில் சில விஷயங்களைத் திட்டமிட்டுக்கொண்டால் அதன் தாக்கத்திலிருந்து நம்மையும் நம் குடும்பத்தின் நிதிநிலையையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
1. ஒவ்வொரு பொருளின் விலையையும் தெரிந்துகொள்ளுங்கள்:
சூப்பர் மார்க்கெட், மால் கலாசாரம் அதிகரித்த பிறகு பெரும்பாலானோரின் வாங்கும் பொருள்களில் விலை என்ன என்பதையே பார்ப்பதில்லை. இதுதான் முதலில் சரி செய்ய வேண்டிய பிரச்னை. பொருளின் விலை என்ன என்பது தெரிந்தால்தான் அது விலை உயர்ந்துள்ளதா என்பதே தெரியும்.
2. மாதச் செலவுக்கு பட்ஜெட் போடுங்கள்:
கடந்த 6 மாத வங்கி/யுபிஐ பரிவர்த்தனைகளைப் பாருங்கள். எங்கெல்லாம் உங்கள் பணம் போயிருக்கிறது என்பதைப் பட்டியலிடுங்கள். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது, அதில் மளிகை, வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய செலவுகள் எவ்வளவு, ஷாப்பிங், சினிமா, ஓட்டல் போன்ற ஆசை செலவுகள் எவ்வளவு என்பதைப் பார்த்து அதற்கேற்ப உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். தேவையற்ற செலவுகளில் கட்டுப்பாடு கொண்டுவாருங்கள்.

3. சேமிப்பு மிகவும் அவசியம்:
அடுத்து வரும் 12 மாதங்களில் எந்தெந்தச் செலவுகள் தவிர்க்க முடியாதவை என்பதைப் பார்த்து முன்கூட்டியே அதற்கான பணத்தைத் தனியாக ஒதுக்கிவையுங்கள். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் பிரீமியம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பண்டிகைக் கால செலவுகள் போன்றவற்றுக்கு எவ்வளவு தேவை என்று திட்டமிட்டு மாதம்தோறும் சிறு தொகையைச் சேமித்து வந்தால் செலவுகளை எளிதில் சமாளித்துவிடலாம்.
4. சம்பளம் உயர்ந்தால் செலவையும் உயர்த்தாதீர்கள்:
உங்கள் சம்பளம் 10% உயர்ந்தால், அதே அளவுக்கு வாழ்க்கைத் தரச் செலவையும் உயர்த்த வேண்டியதில்லை. மாறாக, சம்பள உயர்வின் ஒரு பகுதியை எஸ்.ஐ.பி, ஓய்வூதிய சேமிப்பு அல்லது அவசரகால நிதிக்கு ஒதுக்கி வையுங்கள். அவை பின்னாளில் பெரும் உதவியாக மாறும்.
5. முதலீடுகளைத் தொடங்குங்கள்:
நம்மிடமிருக்கும் பணவிக்கத்தினால் நாளுக்கு நாள் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. எனவே, இன்று நம்மிடம் இருக்கும் பணம் சில ஆண்டுகளில் அதன் வாங்கும் சக்தியைப் பெருமளவில் இழந்துவிடும். அதைச் சமநிலை செய்யவே முதலீடுகள் நமக்கு உதவுகின்றன. அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பிபிஎஃப், தங்கம் போன்ற பல்வேறு முதலீடுகளை கலவையாக மேற்கொள்வது நல்லது.

6. முன்பே திட்டமிடுங்கள்:
குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் போன்ற நீண்டகால இலக்குகளுக்கு இப்போதே திட்டமிடுங்கள். மேலும், கடன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். காரணம், பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில் வட்டி விகிதங்களும் உயரக்கூடும். அதிக வட்டி கொண்ட பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்றவற்றை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்.
7. கட்டணங்களில் கவனம்:
இன்றைய நிலையில் எல்லோருக்கும் மொபைல், இன்டர்நெட், பொழுதுபோக்கு போன்றவை அவசியமாக இருக்கின்றன. ஆனால், இவற்றை பலரும் சரியாக நிர்வகிப்பதில்லை. இன்று மொபைல் ரீசார்ஜ் முதல் ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷன் வரை எல்லாமே கடுமையாக விலை உயர்ந்துவிட்டன. இந்தச் சூழலில் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்பாட்டை வைத்துக்கொள்ளுங்கள். அவசியமில்லாதவற்றை உடனடியாக நிறுத்துங்கள். உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துங்கள்.

8. பராமரிப்புகள் முக்கியம்:
உடல்நிலையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இன்றைய மருத்துவ செலவுகள், சோதனைகளுக்கான கட்டணங்கள் எல்லாமே விண்ணளவுக்குச் சென்றுவிட்டன. சாதாரண மக்களால் அந்தச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சிரமம். எனவே உடல்நிலையை ஆரோக்கியமாகப் பராமரிப்பது அவசியம். அதேபோல், நம்மிடமுள்ள சாதனங்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றையும் முறையாகப் பராமரிப்பது அவசியம். அவற்றிலும் ஏதேனும் பிரச்னை வந்தால் அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பணத்தை வீணாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றைய சூழலில் பணம் இருந்தால்தான் மரியாதை. பணம் இல்லாவிட்டால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.
மக்களே! பணவீக்கம் விலைவாசி உயர்வை சமாளிக்க உங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளை கமென்ட்டில் சொல்லலாம்.


















