``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம...
Ramayana - Part 1 Review: பாலிவுட்டின் ஃபேன்டஸி விருந்து - இந்தியாவின் பிரமாண்ட சினிமா சாதிக்கிறதா?
அசுரக் குலத்தை அடிமைகளாக நடத்தும் தேவர்கள், இலங்கையையும் பிடித்துக்கொள்ள, அங்கிருக்கும் ராணியின் (ஷோபனா) புதல்வன் ராவணன் (யஷ்) பிரம்மனை நோக்கி தவம் இருக்கிறான். மானுடனைத் தவிர எந்த வகையிலும் தனக்கு மரணம் நேராது என்ற வரத்தைப் பெற்று மூவுலகையும் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான். அவனை அழிக்க விஷ்ணு, தசரதன் மைந்தன் ராமனாக (ரன்பீர் கபூர்) பிறக்கிறார். சீதையை (சாய் பல்லவி) திருமணம் செய்துகொள்ளும் மானுடன் ராமன், தன் பிறவிக்கான காரணத்தைக் கண்டறியும் பயணமே இந்த ராமாயணம் முதல் பாகத்தின் கதை.
தெரிந்த கதைதான். ஆனால் அதில் பிரமாண்டம் கூட்டி, செயற்கைத்தனங்கள் பெரிதும் இல்லாத கிராபிக்ஸையும் சாத்தியமாக்கி மிரட்டியிருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி. திரையில் அதிகம் சொல்லப்படாத பின்கதைகளையும் தொட்டு திரைக்கதைக்காகவும் பிரத்யேகமாக உழைத்திருக்கிறது நிதேஷ் திவாரி - ஸ்ரீதர் ராகவன் கூட்டணி.
ராமனாக ரன்பீர் கபூர், அறத்தின் பக்கம் நிற்கும்போதும், வேறு வழியின்றி அழிவுக்கான போரைத் தொடங்கும்போதும் கம்பீரமாக மனதில் பதிகிறார். ஆனால், காதல் காட்சிகளிலும் சீரியஸ் முகம் காட்டுவது ஏனோ? சண்டைக் காட்சிகளுக்கான உழைப்பு, கதாபாத்திரத்துக்குத் தேவையான உடல்வாகு போன்றவற்றில் குறைகள் இல்லை. சீதையாக சாய் பல்லவி, நடிப்பில் அதற்கான நியாயம் சேர்க்கிறார். மற்ற ராமாயண திரை வார்ப்புகள் போலப் பயந்த சுபாவம் கொண்ட நாயகியாக நிற்காமல், அவரும் வாளேந்தி சண்டை புரிவது நல்லதொரு மாற்றம். ராமனுடனே பயணிக்கும் லக்ஷ்மணன் கதாபாத்திரத்தின் மூலமாக காமெடிக்கும் தோரணம் கட்டியது புத்திசாலித்தனமான முடிவு. கச்சிதமான துணைப் பாத்திரமாக அதைச் சரியாகச் செய்திருக்கிறார் ரவி தூபே.
ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி இந்த முதல் பாகத்தில் நம்மை ஈர்ப்பது ராவணனாகச் சமர் செய்யும் யஷ்! கிட்டத்தட்ட அவரே இந்த முதல் பாகத்தின் நாயகன் எனச் சொல்லுமளவுக்குத் தான் இல்லாத காட்சிகளையும் ஆக்கிரமிக்கிறார் இந்த இலங்கை வேந்தன். மிரட்டலான உடல்வாகு, ஆயிரம் பேரைக் களத்தில் சந்திக்கும் தைரியம், தவறு செய்தவர்களைச் சமரசம் காட்டாமல் தண்டிக்கும் குணம் என நம் மனத்திலும் அரியணை இட்டு அமர்கிறார். தசரதராக அருண் கோவில், கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங், அவரின் கணவர் வித்யுத்ஜீவனாக விவேக் ஓபராய், விபிஷணனாக ஹரிஷ் உத்தமன் என ஏகப்பட்ட நடிகர்கள் திரையை ஆக்கிரமித்திருக்கின்றனர்.
`ராமாயணம்' என்றாலும் ராமனின் கதையாகத் தொடங்காமல் ராவணனின் கதையை விரிவாகச் சொல்கிறது முதல் பாதியின் முதல் பாதி. அவரின் எழுச்சி, அவரின் ஆட்சி, அவர் ராமரின் பாதையைக் குறுக்கிடும் தருணம் என அவர் பக்கக் கதைகளையும் பேசுகிறது படம். விஸ்வாமித்திரருடன் காவலுக்குச் செல்லும் ராமன் - லக்ஷ்மணன், அங்கு நடக்கும் சண்டை, சிதையின் சுயம்வரம், எமோஷனலான கைகேயி அத்தியாயம், வனவாசம் என அடுத்தடுத்து பிரமாண்டங்களையும், சுவாரஸ்யங்களையும் அடுக்குகிறது முதல் பாதி.
இரண்டாம் பாதியில் மீண்டும் ராவண அத்தியாயம், சூர்ப்பணகையின் காதல், அசுரர்கள் இடத்தில் நடக்கும் போர் என முடிந்தளவு 3டி-க்கும் பிரமாண்டத் தொழில்நுட்பங்களுக்கும் வேலை வைத்துக்கொண்டே இருக்கின்றனர். எது அசல், எது கிராபிக்ஸ் எனப் பிரிக்க முடியாத அளவுக்கு வனத்தின் காட்சிகளைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது பங்கஜ் குமார் - மகேஷ் லிமாயே கூட்டணியின் ஒளிப்பதிவு. வனவாசம் கிளம்பும் காட்சியை அத்தனை ஆழமான உணர்ச்சிகளின் குவியலாக மாற்றியிருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மான் - ஹேன்ஸ் ஜிம்மர் கூட்டணியின் பின்னணி இசை. ஆங்காங்கே ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய பாடல்கள் நினைவுக்கு வருவதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
இவை அனைத்தையும் கடந்து, நிச்சயமாக இந்த ராமாயணத்தின் ஹீரோ படத்தின் தொழில்நுட்பக் குழுதான். பிரமாண்ட அரக்கர்கள், இலங்கை வனம், அரண்மனைகள், ஜடாயு வடிவமைக்கப்பட்ட விதம், புஷ்பக விமானத்தில் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்திலும் பேருழைப்பைப் போட்டிருக்கிறது படக்குழு. ஆஸ்கர் தூரமில்லை!
கூடுதல் சிறப்பாகத் தமிழ் வசனங்களுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களின் உதட்டசைவையும் ஏ.ஐ கொண்டு சாத்தியப்படுத்தியிருப்பது நிஜமாகவே தமிழில் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வைத் தந்துவிடுகிறது.
அதே சமயம், அனைவரும் அறிந்த கைகேயி - வனவாச எபிசோடைத் தேவைக்கு அதிகமாக நீட்டித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். தமிழுக்காக எழுதப்பட்ட சில வசனங்களில் புலப்படும் இலக்கணப் பிழைகள், குழப்பமான சொற்களின் கோர்வை போன்றவற்றைக் கவனித்திருக்கலாம். அதற்கு ஏ.ஐ உதவவில்லை போல! அரக்கர்கள் வரும் கிராபிக்ஸ் காட்சிகள், சில க்ரீன்மேட் காட்சிகள் ஆகியவற்றில் செயற்கைத்தனம் சற்றே தூக்கலாக இருப்பது நெருடல்.

புராணக் கதையை மற்றுமொரு பக்திப் படமாக அணுகாமல், தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்ட ஃபேன்டஸியாக பரிமாறி திரையரங்கைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறது இந்த `ராமாயணா - பார்ட் 1'.



















