செய்திகள் :

`கலெக்டர் சிறைக்குச் செல்வது உறுதி!' - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வெடிக்கும் இந்து முன்னணி!

post image

திருப்பரங்குன்றத்தில் ஆகம முறைப்படி தீபம் ஏற்றப்பட்டதன் பின்னணியில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு என எதிரெதிர் வாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருக்கின்றன!

மதுரையை அடுத்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில், அண்மைக்காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இதுநாள் வரையில் மலையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக இந்து அமைப்பினர், ‘மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கில், ‘தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என கடந்த வருடமே உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனாலும், ‘இது சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும்’ என்ற காரணத்தைச் சொல்லி நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தது கடந்த தி.மு.க அரசு. இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்ல, ‘24-11-2026 அன்று ஒருநாள் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்’ என்றதோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி, ஆகம விதிமுறைகள் மற்றும் மரபுப்படி தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராடி வருகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘இந்து முன்னணி’ அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்,

“உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய மாவட்ட கலெக்டர் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தும், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. மேலும், ‘தீபம் ஏற்றுவது ஏற்கெனவே உள்ள பாரம்பர்யமா, வழக்கமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அடுத்தகட்ட இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் என இதுவரை ஆறு நீதிபதிகள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாக உத்தரவிட்டும், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை.

சம்பவத்தன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதுகூட, நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், ‘உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன; அதை அமல்படுத்துவோம்’ என்று உறுதியளித்திருந்தனர்.

ஆனால், வழக்கமாக மோட்ச தீபம் ஏற்றப்படும் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆக, நீதிபதிகளிடம் தவறான தகவல் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றத்தையும் தமிழக அரசு ஏமாற்றியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட மீறலாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதில், கலெக்டர் ஆறு மாதங்கள் சிறைக்குச் செல்லக்கூடிய நிலை நிச்சயம் வரும்; அவர் சிறையில் களி தின்னப்போவது உறுதி” என்றார் ஆவேசமாக.

இதற்கிடையே 25-11-2026 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், ‘திருப்பரங்குன்றத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட தூணின் மீது தீபம் ஏற்ற சம்பவத்தன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை’ எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை வரவேற்றுப் பேசுகிற ‘மனித நேய மக்கள் கட்சி’த் தலைவர் ஜவாஹிருல்லா,

“உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்திருக்கிறதோ, அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுதான். ஆனால் கோயில் நிர்வாகம், ‘வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும்; புதிதாக அந்த நில அளவைத் தூணில் தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது’ என்று எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்துவிட்டது.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

ஆக, எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் ‘ஆகம விதிகளை மட்டும்தான் பின்பற்றுவோம்; ஆகம விதிகளுக்கு முரணாகச் செயல்பட மாட்டோம்’ என்று உறுதியாக நின்ற கோயில் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

முருக பக்தர்களுடைய உணர்வுகளை இந்த அரசு புறக்கணித்துவிட்டதாகச் சில அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், இதற்கு முந்தைய நாள் மதுரையில் நடைபெற்ற அனைத்து மத மக்கள் நலக் கூட்டமைப்பில் பங்கேற்ற சிவனடியார்கள் ‘மரபுப்படி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேலே வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றி மரபைக் காப்பாற்ற வேண்டும். புதிதாக நில அளவைத் தூணில் தீபம் ஏற்றக் கூடாது’ என்று வலியுறுத்தினார்கள்.

அதன்படி தமிழக அரசும், ‘தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும்’ என்ற சிலருடைய நோக்கத்துக்கு இடமளிக்காமல், ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. கடந்த முறையும் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இதன் விளைவுகளை நாங்கள் எதிர்கொள்வோம்’ என்று சொன்னார். அதே அடிப்படையில்தான் இந்த அரசும் மிகச் சரியாக செயல்பட்டிருக்கிறது” என்றார்.

புகையால் சூழப்பட்டிருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனை; முட்டி மோதும் நிர்வாகங்கள்.. தீர்வுதான் என்ன?

ஊரு தூங்கும் நேரம் ஊருக்கு நடுவே...உசுர கொல்லும் புகை கொழுந்துட்டு எரிய.. என்ற வரிகளை ஒருவர் பாடுவதுபோல காண்போர் மனதை பதைபதைக்க வைக்கும் காணொளிகள்,`seemai vibes' என்ற வலைதளப் பக்கத்தில் வெளியாகின. காண... மேலும் பார்க்க

"சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் விஜய் அவர்களே.!" - நயினார்

"சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்? இப்படிப்பட்ட ஒருவர் இனியும் தமிழகத்தின் முதல்வராகத் தொடரலாமா?" எ... மேலும் பார்க்க

அமித் ஷா புதுப்பித்த பழைய கூட்டணி; ஆம் ஆத்மியின் ரகசிய வாக்கு ஆயுதம்! - தகிக்கும் பஞ்சாப் களம்!

பாஜக–அகாலி தளம், ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்தவர்கள், இன்று மேடையில் கைகோர்த்து நிற்கிறார்கள். 2022-ல் 117 தொகுதிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து வென்றது வெறும் 5 இடங்கள். இது தோல்வியை மறைக்கும் கூட்ட... மேலும் பார்க்க

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்: "கர்நாடகாவின் சதித் திட்டங்களை முறியடியுங்கள்" - அன்புமணி

"தமிழக நலன்களுக்கு எதிராக கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக தலைவர் ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: ஆளுநரை நேரில் சந்தித்தது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிற... மேலும் பார்க்க