CJP Protest : நாடெங்கும் பரவும் போராட்டம் - அடுத்தது என்ன செய்யும் மோடி அரசு? | ...
'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' - இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?
தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுடைய கைது. அரசியல் மேடையில் முதல்வரை எதிர்த்து பேசியதற்காக உடனடி வழக்கு, அதிகாலையில் வீடு புகுந்து கைது என மார்கண்டேயனுக்கு நடந்திருப்பதை பார்க்கையில் காவல்துறை தனது அதிகாரத்தை பலவந்தமாக பயன்படுத்துகிறதோ எனும் கேள்வியே எழுகிறது.

பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சில சிக்கலான எல்லைகளை உள்ளடக்கியது. சொல்லப்போனால், இதையெல்லாம் பேசினால் தவறு... இதையெல்லாம் பேசினால் தவறு இல்லை என பாரபட்சமின்றி எல்லையை வரையறுப்பதே நிறைய நெருடல்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். அதனால்தான் அவதூறு வழக்குகளை ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்றதாக அவர் அவர் சார்ந்த விவகாரங்களின் தனித்த தன்மையோடே அணுக வேண்டும்.

ஒரு தனி மனிதர் இன்னொரு தனி மனிதரின் மீது அவதூறு வழக்கு தொடர்வதில் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் நீதிமன்றத்திலேயே வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை நோக்கி சென்றுவிடும். அதேநேரத்தில், அத்தனை அதிகாரங்களும் பொருந்திய அரசு இயந்திரம் தங்களுக்கு எதிர் நிலையில் இருக்கும் ஒரு அரசியல் இயக்கத்தின் அரசியலர் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பது சிக்கலானது, அதிகாரத்தனமானது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் மார்கண்டேயன் மீதும் அவதூறு வழக்குகளோடு சேர்த்து கொலை மிரட்டல் மற்றும் பொது அமைதிக்கு குந்தம் விளைவித்ததற்கான சட்டப்பிரிவுகளும் புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.
அரசியல் மேடையில் பேசப்படும் விமர்சனங்களோடு கூடிய தடித்த வார்த்தைகளுக்காக கொலை மிரட்டல் வழக்கு தொடுப்பதை எப்படி ஏற்க முடியும்? வழக்கோடு சேர்த்து உடனடியாக அதிகாலையில் வீடு புகுந்து கைதும் செய்கிறார்கள். மேடையில் பேசியதற்காக அதிரடி கைதில் இறங்குவது கருத்துரிமையின் மீது நம்பிக்கை கொண்ட எல்லாருக்கும் ஒருவித மறைமும அச்சத்தையே கொடுக்கும். அது அரசின் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும் கடிவாளம் போடும்.
அரசியல் மேடைகளில் பகிரப்படும் கருத்துகளுக்கு இப்படி எக்குத்தப்பாக வழக்கு பதிந்து அதிரடி கைது நடவடிக்கை எடுத்தால் இதன் எல்லைதான் என்ன? இதற்கென எதுவும் வரைமுறை இருக்கிறதா? இந்த இந்த வார்த்தைகளை பேசினால் கைது செய்யலாம் இந்த இந்த வார்த்தைகளை பேசினால் கைது செய்ய வேண்டாம் என எதுவும் பட்டியல் இருக்கிறதா? அப்படியெல்லாம் எந்த வரையறையும் கிடையாது.

ஒரு அரசு அவதூறு வழக்குகளுக்கு கைது என இறங்கும் போது அதன் விருப்பத்துக்கு எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ளும். அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மார்கண்டேயன் பேசிய விதங்களில் பலருக்குமே உடன்பாடு கிடையாது. அவை ஆட்சேபனைக்குரிய கருத்துகள்தான். ஆனால், இந்த தடாலடி கைதுகளை எந்த எதிர்ப்பும் இல்லாமல் கடந்து சென்றால், நாளை அரசுக்கு விரும்பத்தகாத எந்த கருத்தை கூறினாலும் உடனடி கைது எனும் வாய்ப்பூட்டு நிலைக்கு இது இட்டுச் செல்லும்.
ஒரு அரசும் அதன் மையமாக இருக்கும் அரசியலர்களும் கொஞ்சம் பரந்துபட்ட மனதோடுதான் இருந்தாக வேண்டும். மேலும், அரசியல் மேடைகளில் பகிரப்படும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்க உங்களாலும் அரசியல் மேடைகளை அமைத்துக் கொள்ள முடியும்.
முதல்வர் திருச்சியிலும் கருரிலும்தானே தனக்கு எதிராக நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு பதில் கொடுத்தார்? 'கவர்ச்சி காட்டுறதுக்கு நான் என்ன....' 'உங்களால ஒரு .... புடுங்க முடியாது' என முதல்வர் விஜய் பேசியதெல்லாம் அவதூறுகள் இல்லையா? அதனால்தான் கேட்கிறேன். அவதூறுகளின் வரையறைதான் என்ன? அரசியல் மேடைகளில் அவதூறுகளுக்கென்று ஒரு வரையறையே வைக்க முடியாது.

'எலும்பை உடைத்துவிடுவேன்' என பேசினால், மார்கண்டேயன் சட்டமன்றத்தில் கதவை பூட்டிவிட்டு முதல்வரின் எலும்பை உடைக்கப் போகிறார் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? தமிழகத்தில் ஒரு முதல்வரை அப்படி அடைத்து வைத்து எலும்பை உடைத்து விடத்தான் முடியுமா? ஆக, இதெல்லாம் அரசியலுக்கு வேகத்தில் பேசப்படும் பேச்சுகள். முதல்வர் விஜய்யும் அவரின் அரசியல் மேடைகளில் இப்படி பேசியிருக்கத்தான் செய்கிறார். அவற்றை அரசியல் நீக்கம் செய்துவிட்டு நேரடியாக பொருள்படும்படி புரிந்துகொண்டால் இங்கே அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கவே முடியாது.
டெல்லியில் போராடிய கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு கைது செய்யப்படுகிறார். அவர் கைதுக்கு முதல்வர் விஜய்யிடம் இருந்து கண்டனம் கூட இன்று மதியம் தான் வருகிறது. ஆனால், இரவில் எம்.எல்.ஏ பேசியதற்கு காலையிலே கைது நடவடிக்கை மேற்கொள்கிறது அரசு.
அரசியலில் உச்சத்தில் இருப்பவர்கள் சில வசவுகளையும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கான மனப்பக்குவம் வாய்க்கப்பட்டிருக்க வேண்டும். தனிமனித எல்லைகளை மீறி அவதூறுகள் செல்வதாக உணர்ந்தால் நீதிமன்றத்தின் வழி அவதூறு வழக்குகளை நடத்த அத்தனை சட்ட வாய்ப்பும் இருக்கிறது. அதைவிடுத்து தடாலடி கைது நடவடிக்கைகளில் இறங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!














