செய்திகள் :

`இந்தியாவின் புதிய அரசியல் வரலாற்றை மாணவர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர்' – ரவிக்குமார் MP | Exclusive

post image

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கரப்பான் ஜனதா கட்சி (CJP) முன்னெடுத்த இந்தப் போராட்டம், கல்வியாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சூக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு தேசிய அளவில் அதிக கவனம் பெற்றது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தற்கொலை சம்பவங்கள் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டம், ஜூன் 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது. அன்றைய தினம் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை மேற்கொண்ட தடியடி மற்றும் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் மாணவர் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்தன.

இந்த நிலையில், அந்தப் பேரணி மற்றும் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பேரணியின் அளவை விவரித்த ரவிக்குமார், “அன்று நடைபெற்ற பேரணியிலும் போராட்டத்திலும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்வளவு பெரிய அளவில் மாணவர்கள் தன்னிச்சையாக திரண்டது ஆச்சரியமாக இருந்தது. ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் நேரடியாக டெல்லிக்கு வந்திருந்தனர். இது சாதாரண அரசியல் ஆர்ப்பாட்டமாக இல்லை; நாடு முழுவதும் மாணவர்களின் மனநிலையை வெளிப்படுத்திய எழுச்சியாக இருந்தது,” என்றார்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

பேரணியின் போது நடைபெற்ற வன்முறை குறித்து அவர் கூறியதாவது “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை டெல்லி காவல்துறை ஈவு இரக்கமின்றி தாக்கியது. அதுமட்டுமல்லாமல், காவல்துறை சீருடை அணியாத சிலரும் லத்தி மற்றும் கற்களைக் கொண்டு மாணவர்களை தாக்கியதாக பல மாணவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று மாணவர்கள் கூறினர். பலருக்கு தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லியில் இதுபோன்ற சம்பவத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.

மேலும், “எம்.பி.ஏ படிக்கும் 25 வயதுக்குட்பட்ட ஐஐடி கான்பூர் மாணவியை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மீது மிகவும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத்தனை வன்முறைக்குப் பிறகும் மாணவர்கள் பின்வாங்கவில்லை. அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்,” என்றார்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நிலை குறித்தும் ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். “பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரியது,” என்றார்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இந்தப் போராட்டத்தின் அரசியல் தாக்கம் குறித்து அவர் கூறுகையில், “12 ஆண்டுகால மோடி அரசின் மீது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த மாணவர் எழுச்சியை பார்க்க வேண்டும். அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தி பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று அதேபோன்ற ஒரு மக்கள் எழுச்சி பாஜக அரசுக்கு எதிராக உருவாகியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“ராகுல் காந்தியின் ஆதரவை மாணவர்கள் வரவேற்கிறார்கள்”

ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த விமர்சனத்திற்கும் பதிலளித்த ரவிக்குமார் “காங்கிரஸ் இந்தப் போராட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்ற கருத்து சரியானதல்ல. ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதை போராட்டத்தில் உள்ள மாணவர்கள் வரவேற்கின்றனர். அது அவர்களுக்கு மனஉறுதியை அளித்துள்ளதாகவே அவர்கள் கூறுகின்றனர்,” என்றார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் முடக்க நிலை குறித்து ரவிக்குமார் கூறுகையில், “இரண்டு நாட்களாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அரசு தயாராக இல்லை. ஆனால் தற்போது விவாதத்திற்கு அழைக்கிறது. எங்களுடைய நிலைப்பாடு தெளிவானது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலகும் வரை விவாதத்தை தொடங்க அனுமதிக்க மாட்டோம்,” என்றார்.

“இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் மாணவர்களும் இளைஞர்களும் தங்களது எதிர்காலத்திற்காக வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் புதிய அரசியல் வரலாற்றை அவர்கள் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் மூலம் எழுதத் தொடங்கியுள்ளனர்,” என்று ரவிக்குமார் தெரிவித்தார்.

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் வ... மேலும் பார்க்க

``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" - CJP நிறுவனர்

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப... மேலும் பார்க்க

'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' - இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?

தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுட... மேலும் பார்க்க