'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் ...
`இந்தியாவின் ராக்ஸ்டார்; அவரைக் கண்டால் அஞ்சுகிறார்கள்'- துகாராம் முண்டேயை புகழும் நியூயார்க் டைம்ஸ்
மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையராக இருப்பவர் துகாராம் முண்டே. இப்பதவிக்கு வந்த நாளில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். சுத்தம் மற்றும் விதிமுறைகளை பேணாத உணவகங்களின் உரிமத்தை உடனுக்குடன் கேன்சல் அல்லது சஸ்பெண்ட் செய்து வருகிறார். இவரது நடவடிக்கையில் சிறு உணவகங்கள் முதல் பெரிய பிராண்ட் வரையிலான உணவகங்கள் வரை என எதுவும் தப்பிக்கவில்லை. துகாராம் முண்டேயின் நடவடிக்கையைப் பார்த்து இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து இருக்கின்றன.
சிங்கம் அல்லது நாயகன் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரான துக்காராம் முண்டே இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முண்டேவை, அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தனது முதல் பக்கச் செய்தியில் "ராக்ஸ்டார்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ``துகாராம் முண்டேயின் பார்வையில் இருந்து எந்த தொழிலும் தப்பித்ததாகத் தெரியவில்லை... உணவருந்துபவர்கள் அவரைப் போற்றுகிறார்கள், உணவக உரிமையாளர்கள் அவருக்கு அஞ்சுகிறார்கள்" என்ற தலைப்புடன் அந்தச் செய்தியை வெளியிட்டு இருக்கிறது. முண்டேவை, `உணவுப் பாதுகாப்புப் பிரபலம்' என்று வர்ணித்துள்ள நியூயார்க் டைம்ஸ், அவரது அதிரடி நடவடிக்கைகள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
முண்டே தனது எக்ஸ் தள பக்கத்தில், நியூயார்க் டைம்ஸ் கட்டுரையைப் பகிர்ந்து, ``நல்லாட்சி என்பது தலைப்புச் செய்திகளை உருவாக்குவது அல்ல, மாறாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், "உணவுப் பாதுகாப்பு என்பது அடிப்படையில் மக்களைப் பாதுகாப்பது, தரநிலைகளை நிலைநிறுத்துவது மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஆகும். செயலாக்கம் நியாயமாகவும், அச்சமின்றியும், சீராகவும் இருக்கும்போது, நிறுவனங்கள் நம்பகத்தன்மையைப் பெறுகின்றன.
மேலும் இந்த அமைப்பு செயல்படுகிறது என்று மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். நியூயார்க் டைம்ஸ், மகாராஷ்டிராவிலிருந்து இது போன்ற ஒரு கதையைப் பதிவு செய்துள்ளது" என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, முண்டேயின் பிரபலம் ஒரு பரந்த விஷயத்தைப் பிரதிபலிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது, ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற சாதாரண அரசாங்கப் பணிகள் வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படும்போது, அதிகாரத்துவ தாமதங்கள் அல்லது பலவீனமான நடவடிக்கைகளுக்கு பழகிப்போன குடிமக்களுக்கு துகாராம் முண்டேயின் செயல் அசாதாரணமானவையாகத் தோன்றக்கூடும் என்று குறிப்பிட்டு இருந்தது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்த செய்தியில், "இந்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரி, அதிரடி சோதனைகளால் மும்பையை அதிர வைக்கிறார்" என்ற தலைப்புடன் முண்டேயைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.
மகாராஷ்டிராவில் மிகவும் சர்ச்சைக்குரிய ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றால் துகாராம் முண்டே என்றுதான் சொல்லவேண்டும். அவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான முறை இட மாறுதல்களைச் சந்தித்து இருக்கிறார். மகாராஷ்டிராவின் மிகவும் அறியப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவரான துக்காராம் முண்டே, எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத மற்றும் உறுதியான சுதந்திரமான செயல்பாட்டைக் கொண்டவர் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார். முண்டே ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை ஒரு சிறு விவசாயியாக இருந்த நிலையில், அவரது தாயார் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குடும்பத்தை வழிநடத்தி வந்தார். ஜில்லா பரிஷத் பள்ளியில் கல்வி பயின்றுகொண்டே, முண்டே தனது குடும்பத்தின் விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டார். பின்னர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை முடித்த அவர், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 20-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
சோலாப்பூர் மாவட்ட ஆட்சியராக, நீர் மேலாண்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டு, 2015-16 ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிர அரசின் 'சிறந்த மாவட்ட ஆட்சியர்' விருதைப் பெற்றார். மேலும், அவர் "மகாராஷ்டிராவின் நீர் மனிதர்" என்றும் சிறப்பிக்கப்பட்டார்.




















