98 கோடி பங்குகள், 83 டாலர் விலை... பங்குச்சந்தைக்கு வரும் AI நிறுவனம் Anthropic;...
ஈரோடு: ஒரே ரேஷன் கடையில் முதல்வர் விஜய்யின் 2 புகைப்படங்கள்; கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் முதலமைச்சர் விஜய்யின் 2 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் எதிர்க்கட்சியினரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள்கள் வழங்கும் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சிறிய அறை கொண்ட ரேஷன் கடையின் பொருள்கள் விநியோகம் செய்யும் பகுதியின் சுவற்றில் முதலமைச்சர் விஜய்யின் இரண்டு புகைப்படங்கள் அருகருகில் மாட்டி வைத்திருக்கிறார்கள். இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், "தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதலமைச்சர் விஜய்யை விளம்பரப்படுத்தவதை மட்டுமே ஒரே குறிக்கோளாகச் செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இயங்கி வரும் ரேஷன் கடையில் முதலமைச்சரின் புகைப்படத்தை வைப்பது தவறில்லை என்றாலும் விளம்பர மோகத்தில் இரண்டு படங்களை ஒரே கடையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?
கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற எண்ணத்திலும் எல்லை மீறிய விளம்பர மோகத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்குவதில் கூட இந்த அளவிற்கு அக்கறை காட்டுவதில்லை இந்த அரசு" என்றனர்.
இது குறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டோம், "அரசு மூலம் ஒரு புகைப்படம் வழங்கப்பட்டது. அதேபோல் விஜய் ரசிகர் மன்றம் மூலம் ஒரு புகைப்படம் வழங்கப்பட்டது. இரண்டையும் மாட்டி வைத்துள்ளோம்" என்றனர்.


















