செய்திகள் :

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

post image

16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், சமூகநிதியும், பேரறிஞர் அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சி கொள்கையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசை கடந்த ஐந்த ஆண்டு காலத்தில் நடத்திக் காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு உங்கள் முன்னால் நிற்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிக சிறப்பாகவே செய்ததாகவே கருதுகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும் இன்றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவருமே போற்றப்படக்கூடியவர்கள். தலைமைப் பொறுப்பு உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்பு தன்மை, காலநேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைபிடித்திருக்கிறேன்.

ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு, அந்த முடிவினால் விளையும் பயன், பயன்பெற்றவர்களின் உயர்வு, உயர்வினால் உண்டாகும் வளம், வளத்தினால் விளைந்திடும் இன்பம், இன்பத்தால் கிடைத்திடும் நன்மை, இதுவே நாம் இப்பொழுது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கை தந்து, நாளைய ஆட்சியாளர்களாக எங்களை தொடர செய்யப்போகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளேன்.

முதல்வர் ஸ்டாலின்

நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் என ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும், என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் நன்றிகள்.

நூற்றாண்டை கடந்த பெருமையோடு இயங்கி வருகிறது, இந்த பேரவை. கடந்த 2021-ம் ஆண்டு இந்த பேரவையினுடைய நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்து, நவீன தமிழ்நாட்டின் சிற்பியான தலைவர் கலைஞரின் படத்தை திறந்து வைத்த அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நன்றி. ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தன்னுடைய சுயமரியாதை எள்முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும் எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன்.

ஸ்டாலின் - ஆளுநர் ரவி
ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு ஆளுநருக்கு என்னுடைய நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் பேரவை தலைவராக பணியாற்றி, அமைதியாகவும் கண்ணியத்தோடும், அதே நேரத்தில் கட்டுப்பாட்டோடும் இந்தப் பேரவையை சிறப்பாக நடத்திச் சென்றதற்காக உங்களுக்கும், பேரவையின் துணைத் தலைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

அவருக்கும், அரசு தலைமை கொறடா, என்னில் ஒரு பாதியாய் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆட்சியின் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகள். பல்வேறு திட்டங்களை நாங்கள் உருவாக்கினாலும், அவை சிந்தாமல் சிதராமல் மக்களிடம் சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி. குறைகளை சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்கு சிறகுகளை தரக்கூடியவர்கள் என்று எண்ணி செயலாற்ற கூடியவன் நான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரசுக்கு தக்க யோசனைகளை கூறுவதிலும், குறைகளை சுட்டி காட்டுவதிலும், கண்ணியமான முறையை கடைபிடித்து ஒத்தழைப்பு நல்கிய எதிர்க்கட்சி தலைவர், மற்றுமுள்ள கட்சி தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கு எல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமை கட்சி தலைவர்களுக்கும் என்னுடைய நன்றி. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் அன்போடும், பாசத்தோடும் என்னிடத்திலே உரிமையோடு அன்பு காட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

16 வது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரோடு, முதலமைச்சர் என்ற முறையிலே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றமைக்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்த அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்களுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றிகளை நான் உரித்தாக்குகிறேன்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஒவ்வொரு துறையிலும் இருந்து வருகிற கோப்புக்களை எனக்கு சமர்ப்பித்து, அனுமதி பெற்று, அத்திட்டங்களை கண்காணிக்கும் என்னுடைய செயலாளர்களுக்கு என்னுடைய நன்றி. இப்பேரவை மிகச் சிறப்பாக நடைபெற, கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டக்கூடிய வகையில், பணியாற்றும் நம்முடைய பேரவை முதன்மை செயலாளர் அவர்களுக்கும், பேரவையினுடைய அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. பேரவையினுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு, உறுப்பினரை உற்சாகப்படுத்தக்கூடிய பத்திரிகையாளர்கள், ஊடகத்ததுறை சார்ந்த நண்பர் அனைவருக்கும் நன்றி.

இந்த நேரத்தில் நான் நினைவுகூற வேண்டியவர்கள், இந்த பேரவைக்கு நாம் எல்லோரோடும் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்முடன் பணியாற்றிய மறைந்த மாண்புமிகு உறுப்பினர்கள் ஐந்து பேரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து, அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக என்னுடைய நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பேரவையில் நான் உரையாற்றும் போது குறிப்பிட்டதை இப்பொழுது நினைவு கூறுகிறேன். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை நான் எப்படி செய்யப்போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது எனச் சொல்லியிருந்தேன். முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு, நமக்கு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசு இரண்டுக்கும் இடையிலே தான் நாம் இருந்தோம்.

நமக்கு பெரும் வெற்றியை தந்து, பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும், எப்பொழுது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தை போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை இயற்றிய சட்டங்களை, மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும், அதனை காரணமாக சொல்லி சும்மா இருக்காமல், நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

திராவிட மாட அரசால், இந்த ஐந்து ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமை பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதி அளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம், இன்னுயிர் காப்போம், 4000-க்கு மேற்பட்ட திருக்கோவில்களில் குடமுழுக்கு, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலைவில் உள்ள ஆதிராவிட பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணி பார்க்கிறேன்.

இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லவே இல்லை... ஒட்டுமொத்த தமிழர்களும், என் கையோடு கை சேர்ந்து எனக்கு, ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்கி பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள். நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன். இன்னும் உழைக்க காத்திருக்கிறேன் நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாளை திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமர வைத்து நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என உழைத்த லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கக்கூடிய திசை நோக்கி வணங்கி, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன் மீண்டும் வெல்வோம் மீண்டும் ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழக மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்." என்றார்.

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் என்ன? | Quick Read

'இன்னும் 10 - 15 நாள்கள்தான் டைம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு கொடுத்து அதிர வைத்திருக்கிறார். ட்ரம்ப் கூறுவது என்ன? "10 - 15 நாள்களுக்குள் ஈரான் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைக் கலை... மேலும் பார்க்க

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு... ஏற்பாடுகள் மும்முரம்! - Photo Album

மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கு... மேலும் பார்க்க