எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!
எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு காரணமாக 31 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் 2-வது அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எத்தியோப்பியா. இங்கு 12 கோடிக்கும் மேலானோர் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், எத்தியோப்பியாவின் பல பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு காலரா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 31 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.
'மேற்கு எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதேபோல, அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என சர்வதேச மருத்துவர்கள் அமைப்பு (என்ஜிஓ) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான குடல் தொற்றுநோய். இது வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்.
தெற்கு சூடானின் அகோபோ பகுதியில் கடந்த 4 வாரங்களில் மட்டும் 1,300 பேருக்கு காலரா தொற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் மிக இளமையான நாடான தெற்கு சூடான் வறுமையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்கு சூடான் அரசுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக காலரா பாதிப்பு மேலும் மோசமடைந்தது.
இந்த மோதலால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்ததால் பலருக்கும் சுத்தமான குடிநீர், மருத்துவ வசதி, சுகாதாரமான சூழல் போன்றவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தடுக்கக்கூடிய மற்றும் எளிதில் சிகிச்சையளிக்கக்கூடிய நோயால் சுமார் 4,000 பேர் இறந்ததாக உலக சுகாதார நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் தெரிவித்தது. ஆப்பிரிக்காவில் இது அதற்கு முந்தைய ஆண்டை விட 71% அதிகமாகும்.