ஏரியா? குப்பைக் கிடங்கா? கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி - நகராட்சிய...
ஏரியா? குப்பைக் கிடங்கா? கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி - நகராட்சியின் விளக்கம் என்ன?
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியின் உட்புறம் மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள சாலையோரங்களிலும் பல மாதங்களாகத் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. நெகிழி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் எனப் பலதரப்பட்ட கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
இதனால் ஏரியின் தூய்மை பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குப்பைகளைக் கொட்டக்கூடாது என்பதற்காக வேலி அமைக்கப்பட்டிருந்தும், அதை மீறிக் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர் குப்பைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்து இந்தச் சாலையோரங்களில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஏரியைச் சுற்றிலும் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.
ஏரியை ஒட்டி ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. தினமும் இந்தப் பாதையில் செல்லும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.மேலும் பல வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.

ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடப்பது ஒருபுறம், அதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் மறுபுறம் எனப் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விகடன் சார்பாக நேரில் சென்று ஆய்வு செய்தோம். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.
அதற்கு நகராட்சி நிர்வாகம் தரப்பில், "ஏரிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, அந்த இடம் முழுவதையும் தூய்மைப்படுத்துவோம். பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்யப்படும். மேலும், இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது என்ற எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும். அதை மீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரப்புரையும் மேற்கொள்ளப்படும். இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கக் கண்காணிப்புக்கு ஆள் நியமிக்கப்படுவதுடன், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும்" என உறுதியளித்துள்ளனர்.
குப்பைகளைக் கொட்டுவதால் ஏரியின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல், அதைச் சுற்றி வசிக்கும் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள இந்த உறுதியை விரைவில் செயல்படுத்தி, திருப்பத்தூர் பெரிய ஏரியைத் தூய்மையான நிலைக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



















