அமெரிக்காவில் ஒரு ஆன்மீக சாதனை! – 12 ஆண்டுகள் தடையின்றி நடந்த 'ஸ்ரீமத் பாகவதம்'
`ஐ.டி வேலை புரொஃபஷன்... பேக்கிங் என்னுடைய பாஷன்!' - பிரௌனி விற்பனையில் கவனம் ஈர்க்கும் சேலம் இளைஞர்
“நன்றே செய், அதை இன்றே செய். நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய சரியான நேரத்துக்காகக் காத்திருக்கக் கூடாது. சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை... நல்ல விஷயத்தை இன்றே தொடங்கிடணும்!”
பகலில் லேப்டாப் முன் SEO Executive-ஆக ஐ.டி வேலை... மாலை நேரத்தில் தன் கைகளால் தயாரித்த பிரௌனிகளை விற்பனை செய்யும் தொழில்முனைவு. இப்படிப் புரொஃபஷனையும் பாஷனையும் சமநிலைப்படுத்தி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த கண்ணன்.
அம்மாபேட்டையைச் சேர்ந்த கண்ணன், Yaandu Corporate Private Limited நிறுவனத்தில் SEO Executive-ஆகப் பணியாற்றுகிறார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகப் பணி. அதன் பிறகு மாலை 6.15 மணி முதல் இரவு 10 மணி வரை சேலம் ஃபேர்லண்ட்ஸ் க்ரீன்வே ரோடு பகுதியில் ‘டெசர்ட் கோஸி’ (Dessert Cozy) என்ற பெயரில் ஸ்ட்ரீட் கார்ட் மூலம் பிரௌனி விற்பனை செய்து வருகிறார்.

பொழுதுபோக்காகத் தொடங்கியது... பாஷனாக மாறியது!
“ஆரம்பத்தில் பேக்கிங் எனக்கு ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது. புதுப்புது ரெசிபிகளை முயற்சி செய்து பார்த்தேன். நான் செய்ததைச் சாப்பிட்டவர்கள் பாராட்டியபோது, பேக்கிங் மீதான ஆர்வம் அதிகமானது. யூடியூப் காணொளிகள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொடர்ந்து செய்து பார்த்ததன் மூலம் கற்றுக்கொண்டேன்” என்கிறார் கண்ணன்.
முதன்முதலில் செய்த பிரௌனி சரியாக வரவில்லை. ஆனால், முயற்சியைக் கைவிடாமல் மூலப்பொருட்களின் அளவு, பேக்கிங் நேரம் உள்ளிட்டவற்றை மாற்றி மாற்றி முயற்சி செய்தார். நண்பர்களும், தெரிந்தவர்களும் கொடுத்த பாராட்டுகள், “இதை ஏன் ஒரு தொழிலாகச் செய்யக் கூடாது?” என்ற எண்ணத்தை உருவாக்கியது.
ரூ.6,000 முதலீட்டில் தொடங்கிய ‘டெசர்ட் கோஸி’!
2025 ஏப்ரல் 14-ம் தேதி ரூ.6,000 முதலீட்டில் ‘டெசர்ட் கோஸி’ தொடங்கப்பட்டது. தற்போது தினசரி சுமார் ரூ.700 முதல் ரூ.1,000 வரை வருமானம் கிடைத்து வருகிறது.
“பெரிய முதலீடு செய்துதான் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. என்னால் முடிந்த அளவில் சிறியதாகத் தொடங்கினேன். முதன் முறையாக ஸ்ட்ரீட் கார்ட்டில் நின்றபோது பயமும் உற்சாகமும் இருந்தது. முதல் வாடிக்கையாளர் பிரௌனி வாங்கிய தருணம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்தது” என்று அவர் கூறுகிறார்.

நண்பர்கள், குடும்பம்... பக்கபலமாக!
மேலும் அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு மாலை நேரத்தில் ஸ்ட்ரீட் கார்ட்டில் நிற்பதைப் பார்த்து நண்பர்களும், சக ஊழியர்களும் ‘இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க?’ என்று கேட்டார்கள். ஆனால், போகப்போக என்னுடைய பாஷனைப் புரிந்துகொண்டு அவர்களே ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள். இப்போது என்னுடைய பல நண்பர்களும், சக ஊழியர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
என்னுடைய அப்பா, அம்மா, சகோதரி மூன்று பேரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அலுவலக வேலைக்கும் பிசினஸுக்கும் இடையே நேரத்தைச் சமாளிக்க அவர்களுடைய உதவியும், நண்பர்களுடைய ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது” என்கிறார் கண்ணன்.
ஐ.டி-யில் கிடைக்கும் திருப்தி வேறு... பேக்கிங்கில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு!
“ஐ.டி வேலையில் ஒரு பணியை வெற்றிகரமாக முடிக்கும்போது ஒரு விதமான திருப்தி கிடைக்கும். ஆனால், பேக்கிங்கில் நம்ம கைகளால் செய்த ஒரு பொருளை வாடிக்கையாளர் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சந்தோஷமாகச் சிரிக்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு.
குறிப்பாக, ஒரு பிறந்தநாள் அல்லது திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுக்காக நாம் தயாரித்த கேக் ஒருவருடைய மகிழ்ச்சியான தருணத்தில் இடம்பெறும்போது மனதுக்கு ரொம்பப் பூரிப்பாக இருக்கும். அதனால்தான் பேக்கிங்கை நான் வெறும் சைட் பிசினஸாகப் பார்க்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
“எங்கள் பிரௌனியின் ரகசியப் பொருள்... அன்பு!”
தன்னுடைய தயாரிப்புகளின் சிறப்பு குறித்து அவர் கூறுகையில், “எங்களுடைய பிரௌனியில் பெரிய ரகசியப் பொருள்களெல்லாம் எதுவும் கிடையாது. எப்போதும் பிரெஷ்ஷான பொருள்கள், நல்ல தரம், சுத்தமாகத் தயாரிப்பது, பதப்படுத்திகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துகிறோம்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி, நான் ஒவ்வொரு முறை பிரௌனி செய்யும்போதும் அதில் கொஞ்சம் கூடுதல் அன்பு கலந்து கொடுக்கிறேன். ஒரு வாடிக்கையாளர் நம்ம பிரௌனியை ருசித்துப் பார்த்துவிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடி வந்து ஆர்டர் செய்கிறார் என்றால், அதுதான் எங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பாராட்டு” என்கிறார்.
பிரௌனி மட்டும் இல்லை... இனிப்புகளின் முழு உலகம்!
“‘டெசர்ட் கோஸி’யில் பிரௌனி மட்டுமன்றி தனிப்பயனாக்கப்பட்ட கேக்குகள், பென்டோ கேக்குகள், கப் கேக்குகள், டீ கேக்குகள், ஜார் கேக்குகள், பிரௌனி பெட்டிகள், சாக்லேட் பொருள்கள், குக்கீகள் உள்ளிட்ட பல்வேறு பேக்கிங் தயாரிப்புகளையும் செய்து தருகிறோம். குறிப்பாக, பிரௌனி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கேக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எதிர்காலத்தில் ‘டெசர்ட் கோஸி’யை ஒரு பெரிய பிராண்டாக வளர்த்து, சொந்தமாக ஒரு பேக்கரி அல்லது கபே தொடங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு” என்கிறார்.

“நன்றே செய், அதை இன்றே செய்!”
இளைஞர்களுக்கான தன்னுடைய அறிவுரையாக அவர் கூறுகையில், “உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தொடங்க சரியான நேரத்துக்காகக் காத்திருக்காதீர்கள். சிறியதாக இருந்தாலும் இன்றே தொடங்குங்கள். தவறுகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை நாளைக்குத் தள்ளிப் போடாதீர்கள். ‘நன்றே செய், அதை இன்றே செய்’ என்று நினைத்து முதல் அடியை இன்றே எடுத்துவையுங்கள்.
ஐ.டி வேலை என்னுடைய புரொஃபஷன்; பேக்கிங் என்னுடைய பாஷன். இரண்டையும் என்னால் முடிந்தவரை சமநிலைப்படுத்திப் பயணிக்கிறேன்!” என்கிறார் கண்ணன்.
பொழுதுபோக்காகத் தொடங்கிய பேக்கிங், முயற்சியால் பாஷனாக மாறி, இன்று தொழில் முயற்சியாக வளர்ந்திருக்கிறது. குடும்பத்தின் ஆதரவு, நண்பர்களின் ஊக்கம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை என அனைத்தையும் துணையாகக் கொண்டு முன்னேறி வருகிறார் கண்ணன்.















