`ஐ.டி வேலை புரொஃபஷன்... பேக்கிங் என்னுடைய பாஷன்!' - பிரௌனி விற்பனையில் கவனம் ஈர்...
மேகமலை: "6000 குடும்பங்களின் வாழ்வாதாரம்; விரைந்து நடவடிக்கை வேண்டும்" - அரசுக்கு விசிக வலியுறுத்தல்
மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அகற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மேகமலை - வருசநாடு வனப்பகுதி 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள், கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலைப் புலிகள் காப்பகத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கடந்த நூறாண்டுகளாக இப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 6000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கும், விவசாயத்தை மேற்கொள்வதற்கும் வனத்துறையினரால் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (Central Empowered Committee - CEC) ஒன்று அமைக்கப்பட்டது. அது 2025 மார்ச் முதல் 2026 சனவரி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
இந்தக் குழு அளித்த இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில், 29.05.26 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்தது. கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள 5072.653 ஹெக்டேர் நிலப்பரப்பை 4601 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ள தகவல் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலங்காலமாக இப்பகுதிகளில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அவர்களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய துணை ராணுவப்படையை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையை மத்திய குழு சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17.8.2026) சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள், 'மக்களை ஆக்கிரமிப்பாளர்கள்' என்று அப்புறப்படுத்த சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு 'சீராய்வு மனு' தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு அம்மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மூன்று தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதாமல், 2006 வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு பட்டா, வன உரிமை சட்ட சான்றிதழ் உள்ளிட்ட உரிய சட்ட பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 'வன உரிமைகள் சட்டம்-(2006)' -ஐ நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகவுள்ள சிக்கல்களைக் களைந்து அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். வனங்களில் வாழும் பழங்குடியினர் மற்றும் பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இச்சட்டத்தின்படி உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














